ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 25. கல்லாமை

பதிகங்கள்

Photo

நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலையென் றுணர்வீர்காள்
எல்லா வுயிர்க்கும் இறைவனே யாயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காணவொண் ணாதே. 

English Meaning:
Things transitory you fix in heart as abiding joys,
This mortal body frail you deem as enduring stuff;
Though the Lord God all life pervades;
Absent are He and His Light from the hearts of the unlearned.
Tamil Meaning:
நிலைபெறாத இயல்பினை உடைய பொருள் களையே நிலைபெற்ற பொருள்களாக நெஞ்சில் நினைத்து, அதனானே, நிலைபெறாத உடம்பையும் நிலைபெற்றதாக நினைக் கின்ற புல்லறிவாளரே, எங்கள் சிவபெருமான் எல்லா உயிர்கட்கும் முதல்வன் என்பது உண்மையேயாயினும், உம்மைப் போலக் கல்லாத புல்லறிவாளர் நெஞ்சில் அவனைக் காண இயலாது.
Special Remark:
`கற்றவர் நெஞ்சில் மட்டுமே காண இயலும்` என்ப தாம். நிலை - இயல்பு; அஃது அதனை உடைய பொருளைக் குறித்தது. ``நெஞ்சத்து`` என்றதன்பின், `நினைத்தலால்` என்பது எஞ்சி நின்றது.
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. -குறள், 331
என்ப ஆகலான், நில்லாக் குரம்பை நிலையென்றுணர்தல் புல்லறி வாண்மை யாதலும், ``கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை`` (தி.8 கண்டபத்து, 4) என்றமையால், கல்லாதார்க்கு உள்ளது அப் புல்லறிவே என்பதும் பெறப்பட்டன. மேலைத் திருமந்திரத் துள்,``எங்கள்தம் இறை`` என்றது இதனுள்ளும் வந்து இயைந்தது. ``ஒண்ணாதே`` என்னும் ஏகாரம் தேற்றம்.
இதனால், கல்வி கேள்வியில்லாதார்க்கு உளதாவது புல்லறிவே (திரிபுணர்வே) என்பது கூறப்பட்டது.