
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 20. அறஞ்செயான் திறம்
பதிகங்கள்

எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன்ன
ஒட்டிய நல்லறஞ் செய்யா தவர்செல்வம்
வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே.
English Meaning:
The ripening nux vomica falls profitless on the ground;Such the barren wealth of those who charities deny;
With usurious greed they bury deep their treasures,
The hardened sinners know not the Truth.
Tamil Meaning:
எட்டிமரத்தில் பழுத்த பெரிய பழங்கள் ஒருவர்க்கும் பயன்படாது வீழ்ந்து அழிந்தாலொப்பனவாகிய, பொருந்திய நல்லறஞ் செய்யாத உலோபிகளது பொருள், வட்டி மிகப் பெறுதலாலே குவிந்து, மண்ணில் குழிபறித்துப் புதைக்கப் பட்டொழிவதேயாகும், பட்டிகளாகிய தீவினையாளர் அறத்தின் பயனை அறியார் ஆகலான்.Special Remark:
``பழுத்த`` என்றது, முதல்மேல் நின்ற சினைவினை. `வீழ்ந்தன` என்பதே பாடம் எனினும், பொருள் இதுவே என்க.`மண் ணின் இடும்` என இயையும். முகத்தல், மண்ணைப் பறித்தல். `இடும்` என்பது செயப்பாட்டு வினையாய் நின்றமுற்று.
பட்டி - பட்டிமை; அஃதாவது வேண்டியவாறே ஒழுகுந்தன்மை. பொருள் முட்டுவந்துழி அது நீங்குதற்பொருட்டுத் கடன் கொள்பவர்பால் அம் முட்டுப்பாடே காரணமாக அவர் பொருளை `வட்டி` என்னும் பெயரால் தாம் வேண்டும் அளவு பறிப்பார், தம் பொருளைப் பிறர்க்கு ஈயாதவரினும் கொடியராதல்பற்றி அவரை, `பட்டிப் பதகர்` என்றார்.
``பாதகர்`` என்பது குறுகி நின்றது. கடன் கொடுப்பார் வட்டி பெறுதல் இயல்பாய் இருக்க அதனை மிகைபடக் கூறலாக எடுத்தோதிய அதனால், ``வட்டி`` என்று அளவிற்கு மேற்பட்டதனைக் குறித்தது. `ஆகலான்` என்பது சொல்லெச்சம்.
இதனால், அறஞ் செய்யாதவரது பொருள் போமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage