
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 6. செல்வம் நிலையாமை
பதிகங்கள்

இயக்குறு திங்கள் இருட்பிழம் பொக்கும்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனைப்
பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே.
English Meaning:
Wealth waxes and wanes like the moonThe radiant moon that life animates into massive darkness turns;
Why then speak of riches which no better fate can meet?
If the Heaven`s King, you unwaveringly seek,
Like pouring clouds choicest treasures fall at your feet.
Tamil Meaning:
வானத்தில் இயங்குதலைப் பொருந்திய நிலவு நிலைத்து நில்லாமல் இருட்பிழம்பு போல்வதாகிவிடுகின்ற துன்ப நிலையையே உடையது செல்வம் என்பதைச் சொல்ல வேண்டு வதில்லை. (நேற்று அரசனாய் இருந்தவன் இன்று அடியனாயினமை கண்கூடாகப் பலராலும் அறியப்பட்டதே.) ஆதலின், செல்வச் செருக்கில் ஆழ்தலை விடுத்து, துறக்கச் செல்வத்தினரான தேவர் கட்கும் அச்செல்வத்தை அவர்பால் வைத்தலும், வாங்குதலும் உடைய தலைவனாகிய சிவபெருமானை நினையுங்கள்; அவன் தன்னை நினைப்பவர்க்குக் கார்காலத்து மேகம் போலப் பெருஞ் செல்வத்தை ஒழியாமல் தருபவனாகின்றான்.Special Remark:
இயக்கு - இயங்குதல்; முதனிலை திரிந்த தொழிற் பெயர். பொதுப்பட, ``இயக்கு`` என்றமையால், முற்பக்கமாகிய நற்காலம் காரணமாகத் திங்கள் வளர்ச்சியுறுதலும், பிற்பக்கமாகிய தீக் காலம் காரணமாக அது தேய்வுற்று இருட்பிழம்பு போலாவதும் ஆகிய இருதன்மையும் கொள்ளப்படும். படவே, பொருட்கண்ணும், செல்வம் நல்லூழ் காரணமாக வளர்தலும், தீயூழ் காரணமாகக் குறைந்து மறைதலும் ஆகிய இருதன்மைகளும் விளங்குவனவாம்.கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்;
போக்கும் அதுவிளிந் தற்று. -குறள். 232
எனத் திருவள்ளுவர், செல்வத்தின் ஆக்கக் கேடுகட்கு உண்மைக் காரணமான காலத்தை, அதன்வழி நிகழும் பொதுக் காரணத்தின்வழி உய்த்துணரக் கூறினமை உணர்க. மேல், ``செல்வன்`` எனக் குறிப்பாற் கூறியதனை இதனுட் கிளந்து கூறியவாறு காண்க. செல்வத்தைத் தருபவனை, ``செல்வம்`` என்றார்.
இவ்விரண்டு திருமந்திரங்களாலும், `செல்வம் நில்லாது நீங்கும் இயல்பினது` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage