
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு
பதிகங்கள்

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.
English Meaning:
Revealed Alike In Sanskrit and TamilWhen rain and summer and long drawn dews stay occuring,
And when they sustain the lakes,
Then did He in Sanskrit and Tamil at once,
Reveal the rich treasure of His compassion to our Mother Great.
Tamil Meaning:
பெருகற்காலத்தும், சிறுகற்காலத்தும் நிறைந்த மெய்யுணர்விருக்கவும் அதனை நோக்காது புலனுணர்வே மிகப் பெற்று மக்கள் மெலிவுறுகின்ற காலத்து அம்மெலிவு நீங்குமாறு சிவ பெருமான் `ஆரியம், தமிழ்` என்னும் இருமொழிகளை உமா தேவியார்க்கு ஒருங்கு சொல்லி உலகம் உய்யத் திருவருள் செய்தான்.Special Remark:
`அவற்றையே பின்னர் பாணினி முனிவர்க்கும், அகத்திய முனிவர்க்கும் செப்பஞ் செய்யுமாறு உணர்த்தி, உலகில் பரவச்செய்தான்` என்க. `வடமொழிக்கு இந்திரனால் செய்யப்பட்ட ஐந்திர வியாகரணமே முதல் நூல்` என்றல் பழங்கதையேயாக, உண்மையில் உள்ளது பாணினீயமே. அதனால்,``வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாந் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்``
-காஞ்சிப்புராணம்
என்றலே சிவநெறி மரபு என்க.
பலதலைப்பட்ட உணர்வுடையராய்ப் பரந்துசென்று ஆராயும் உலகர் பொருட்டு ஆரியமொழியும், அவ்வாறன்றி ஒருதலைப்பட அமைந்த உணர்வுடையராய் ஒழுக்கத்தில் நின்று பயன்பெற விரும்பும் நல்லோர் பொருட்டுத் தமிழ்மொழியுமாக இருமொழியை இறைவன் சொல்லியருளினான் என்பது,
``தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்`` -தி.10. பா.26
என நாயனார் மேலே அருளிச்செய்தவாற்றால் பெறப்படும். இவ்வாறு இவ்விருமொழியையும் ஒப்பக்கொண்டதன்றி ஒன்றை உயர்ந்ததாகவும், மற்றொன்றைத் தாழ்ந்ததாகவும் ஆன்றோர் கொண்டிலர் என்பது இதனால் பெறப்பட்டது. இங்ஙனமாகவும் சிலர் இவற்றுள் ஒன்றைப் பற்றி மற்றொன்றனை இகழ்வர். அவர், இது முதல் மூன்று திருமந்திரங்களை, `நாயனார் வாக்கல்ல` என விலக்கிச் செல்வர். அவர், ``தமிழ்ச்சொலும் வடசொலும் தாள்நிழற் சேர`` (தி.1 ப.77 பா.4) ``ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்`` (தி.6 ப.23 பா.5) என்றாற் போல்வன வற்றையும் அவ்வாறு விலக்கிப்போவர் போலும்!
மொழிகளது நிலை, `நுண்மை, பொதுமை, இடைமை, பருமை` என நான்கு வகைப்படும். அவை முறையே, `சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி` என வடமொழியிற் சொல்லப்படும். அவற்றுள், `மத்திமை, வைகரி` எனப்படுகின்ற இடைமொழி பரு மொழிகள் தாம் ஆரியம், தமிழ் முதலிய பாகுபாடுகளைப் பெற்று நிற்கும். அவற்றிற்கு முந்திய நிலைகள் பாகுபாடின்றியே விளங்கும். அவற்றுள் பிரணவர் முதலியோரும் அனந்த தேவரும் ஆகமங்களைப் பெற்றது `சூக்குமை` எனப்படும் நுண்மொழியினாலாம். சீகண்டர் பெற்றது `பைசந்தி` என்னும் பொதுமை மொழியால். சீகண்டரிட மிருந்து நந்தி முதலிய கணங்கள், தேவர், முனிவர், சித்தர் பெற்றது இடைமொழியாகிய மத்திமையினால். அவர்களிடமிருந்து மக்கள் பெற்றது `வைகரி` எனப்படும் பருமொழியினால். `சிலர்க்கு இயல் பாகவே மெய்யுணர்வு உண்டாயிற்று` என்றல் இறைவன் உள்நின்று நுண்மொழி இடைமொழிகளால் விளக்கியதே என்க. அதனால், கணங்கள் முதலியோர் பொருட்டே பாகுபட்ட மொழிகளை இறைவன் சொல்லினன்` எனக் கொள்க. இவற்றுள், இடைமொழிக்கு (மத்தி மைக்கு) முற்பட்டவற்றையே, ``சொற்பிரிவிலாத மறை`` (தி.3 ப.78 பா.2) என்று திரு ஞானசம்பந்தர் அருளிச் செய்தார். அதற்கு இவ்வாறு பொருள் கொள் ளாது `சொற்கள் நீங்காது நிற்கின்ற மறை` என உரைப்பின் பொருள் படாமை அறிக. ``எழுதா மறை`` எனப்படுவதும் இச்சொற்பிரிவிலாத மறையே. அதனையே ஆரிய வேதத்திற்கு மரபாகக் கொண்டனர் அந்தணர். `எழுதா மறை` என்பதற்கு, `எழுத வாராத மறை` என்பதே பொருளன்றி, `எழுதாமல் இருப்பதையே மரபாகக் கொண்ட மறை` என்பது பொருளாகாது.
``ஆற்றல் அழியும் என்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றிஉரைத் தேட்டின் புறத்தெழுதார்`` -திருவள்ளுவமாலை. 15
என்ற செய்யுளும், `எழுதப்படுவதனை எழுதாதிருக்கின்றனர் அந்தணர்` என்றே கூறிற்று. எனவே, `எல்லையிலா மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை` (தி.12 பெ.பு.ஞானசம். 75) என்பதில், `எழுது மறை` என்றது, `சொற்பிரிவிலாத மறையைத் `தமிழ்` என `ஒரு மொழியாய்ப் பிரிந்து தோன்றி எழுதப்படுமாறு வைத்த மறை` என்றவாறாயிற்று.
இதனால், மேலுலகத்தில் பிரணவர் முதலியோர்க்குச் சொல்லிய ஆகமங்கள் கீழுலகத்தார்க்கு விளங்குதற்பொருட்டு இறைவன் பருமொழிகளைப் படைத்தமை கூறப்பட்டது. `ஆகமங்கள் விளங்குதற்பொருட்டே மொழிகளைப் படைத்தான்` என்றமையால், அம்மொழிகளில் அவ்வாகமங்களை அவன் கூறினமையும் பெறப்படும்.
``மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்``
-தி.8 திருவாசகம். கீர்த்தி. 9. 10
``கேவேட ராகிக் கெளிறது படுத்து
மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்தி ரத்திருந்
துற்றஐம் முகங்க ளாற்பணித் தருளியும்``
-தி.8 திருவாசகம் கீர்த்தி. 16. 20.
வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்றிருந் தருளித்
துள்ளு வார்புனல் வேணியார் அருள்செயத் தொழுதே
தெள்ளும் வாய்மையின் ஆகமத் திறனெலாந் தெரிய
உள்ள வாறுகேட் டருளினாள் உலகைஆ ளுடையாள்.
-தி.12 பெ. பு. திருக்குறிப்பு. 50.
என்றாற்போல வருவன பலவும் சிவபெருமான் தனது ஆகமங்களைப் பருமொழியால் விளக்கிய வரலாற்றைக் குறிப்பனவேயாம். இறைவன் படைத்த பருமொழியை இந்நாயனார், `ஆரியம், தமிழ்` என இரண்டாகக் கூறினமையின், ஆகமங்கள் அவ் இருமொழியிலும் கூறப்பட்டன என்றல் பொருந்துவதே என்க. இதனானே, பிறநெறிகள்யாவும், `ஆரியம் ஒன்றே கடவுள்மொழி; தமிழ் முதலிய பிறமொழிகள் யாவும் தேசியம் - அஃதாவது அவ்வந் நிலப்பகுதியில் வாழும் மக்கட்கு அமைந்த மொழி` என்னுமாயினும், சிவநெறி, ஆரியம் தமிழ் இரண்டையுமே கடவுள்மொழி என ஒப்பக்கொள்வது என்பது பெறப்பட்டது. இந்நாயனார்க்குப் பல நூற்றாண்டுகட்குப் பின் பிறர் சிலரும் இவ்வாறு கொண்டனர்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage