
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு
பதிகங்கள்

அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.
English Meaning:
THE GREATNESS OF THE AGAMASAgamas From The Fifth Face Of Siva
The Lord that consorts with his blue-hued half
Has the Agamas twenty-five and three;
Bowing low, the six and sixty heard
His Fifth-Face the Agamas expound.
The 28 Agamas are: 1. Kamigam, 2. Yojanam, 3. Sivithiam, 4. Karanam, 5. Ajitham, 6. Deeptham, 7. Sukshmam, 8. Sahasram, 9. Hamsumam, 10. Suprabedam, 11. Vijayam, 12. Niswasam, 13. Swayambuvam, 14. Agneyam, 15. Vijayam, 16. Rauravam, 17. Makutam, 18. Vishalam, 19. Chandra Jnanam, 20. Mukha Bimbam, 21. Purorgeetham, 22. Lalitham, 23. Siddham, 24. Santanam, 25. Sarvoktam, 26. Parameswaram, 27. Karanam, 28. Vathulam.
Tamil Meaning:
சிவபெருமான் அருளிச்செய்த ஆகமங்கள் இருபத்தெட்டு உள்ளன. அவை, அறுபத்தாறுபேர் அப் பெருமானை வணங்கி அவனது மேன்முகமாகிய ஈசான முகத்தில் அரிய கருத்துக் களைக் கேட்டுணர்ந்தனவாம்.Special Remark:
அவ்வாகமங்கள், `காமிகம், யோகசம், சிந்தியம், காரணம்,அசிதம், தீத்தம், சூக்குமம், சகத்திரம், அஞ்சுமான், சுப்பிர பேதம், விசயம், நிசுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், இரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம், புரோற் கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோத்தம், பாரமேசுவரம், கிரணம், வாதுளம்` என்பன.சிவபெருமானுக்கு நாற்றிசை நோக்கி நான்கு முகங்களும், உச்சியில் வான்நோக்கி ஒருமுகமுமாக உள்ள ஐந்து முகங்களையும் கீழிருந்து முறையே, `சத்தியோசாதம் (மேற்கு), வாமதேவம் (வடக்கு), அகோரம் (தெற்கு), தற்புருடம் (கிழக்கு) ஈசானம் (உச்சி)` என எண்ண, ஐந்தாவதாக வருவது ஈசான முகம். `சிவபெருமான் மேற்சொல்லிய இருக்கு முதலிய வேதங்கள் நான்கனையும் கீழுள்ள தற்புருடம் முதலிய நான்கு முகங்களானும், ஆகமங்களை மேலே உள்ள ஈசான முகத்தாலும் அருளிச்செய்தான்` என்பவாகலின், ஆகமங்களை, ``அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டது`` என்றார்.
அஞ்சாம் முகம் - ஐந்து என்னும் எண்ணின்கண் நிற்கும் முகம். இனி, `சத்தியோசாதம் முதல் கீழே உள்ள நான்கு முகங்களாலும் முகத்திற்கு ஐவைந்தாகக் காமிகம் முதல் முகவிம்பம் ஈறாக உள்ள இருபது ஆகமங்களையும், மேலே உள்ள ஈசானமாகிய ஒருமுகத்தால் எஞ்சிய எட்டு ஆகமங்களும் அருளிச்செய்தான்` எனக் கூறுதலும் உண்டு. ஆதலின், அப்பொருளும் தோன்றுமாறு ``அஞ்சாம் முகத்தில்`` என்றார். இப்பொருட்கு, ``அஞ்சாம் முகம்`` என்றதை, `அஞ்சாகி நிற் கின்ற முகம்` என்றவாறாக உரைக்க. பின்னர்க் கூறிய முறைமைக்கு, `மேல்முகமாகிய ஈசானம் ஒன்றே சத்தியோசாதம் முதலிய ஐந்தனை யும் உடையதாய் இருக்கும்; அவற்றின்கண்ணே காமிகம் முதலிய ஆகமங்கள் ஐவைந்தாகவும், எட்டாகவும் தோன்றின` என, இரண்டு கருத்தும் தம்முள் முரணாதவாறு விளக்கம் தருபவர் உளர்.
இனிச் சத்தியோசாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் என்னும் முகங்களால் முறையே, `கௌசிகர், காசிபர், பாரத்து வாசர், கௌதமர், அகத்தியர்` என்னும் முனிவர்கட்கு மேற்சொல்லிய ஆகமங்கள் உணர்த்தப்பட்டன என்பது, `நிலவுலகில் மகேந்திர மலையில்` என்ற, தி.8 திருவாசகக் கீர்த்தித் திருவகவலால் (அடி. 19. 20) அறியப் படுவதாம்.
இனி, ஆகமங்களைக் கேட்ட அறுபத்தறுவருள், `எல்லாரும் எல்லா ஆகமங்களும் கேட்டனர்` என்பதில்லை; `காமிகம் முதல் சுப்பிரபேதம் ஈறாக உள்ள பத்தினையும் ஒன்றை ஒருவராகப் பதின்மர் சிவபெருமானிடங் கேட்க, அவருள் ஒருவரிடத்து ஒருவராக ஓரா கமத்தை மற்றும் இருவர் கேட்டனர்` என்பதே வரலாறு. ஆகவே, காமிகம் முதலிய பத்தினையும் கேட்டவர் முப்பதின்மராகின்றனர்.
அவருள் காமிக முதலிய பத்தினையும் சிவபெருமானிடம் நேரே கேட்ட பதின்மராவார், `பிரணவர், சுதாக்கியர், சுதீத்தர், காரணர், சுசிவர், ஈசர், சூக்குமர், காலர், அம்பு, தேசேசர்` என்போர்.
இனி இப்பதின்மருள் ஒருவரிடத்தினின்று இவ்விருவராக வழிவழிக் கேட்ட இருபதின்மராவார், `திரிகலர், அரர் - பசுமர், விபு - கோபதி, அம்பிகை - சர்வருத்திரர், மிரசேசர் - சிவர், அச்சுதர் - திரிமூர்த்தி, உதாசனர் - வைச்சிரவணர், பிரபஞ்சனர் - பீமர், தருமர் - உக்கிரர், ஆதித்தியர் - விக்னேசர், சசி` என்போர்.
இம்முப்பதின்மரும், `சிவர்` எனப்படுதலால், இவர்களால் கேட்கப்பட்ட காமிகம் முதலிய பத்து ஆகமங்களும் `சிவபேதம்` எனப்படுகின்றன.
இனி, எஞ்சிய விசயம் முதல் வாதுளம் ஈறாக உள்ள பதினெட்டு ஆகமங்களுள் ஒவ்வொன்றை ஒவ்வொருவர் சிவபெரு மானிடம் நேரே கேட்க, அவரிடம் அவற்றை மற்றும் ஒவ்வொரு வராகக் கேட்டனர். ஆகவே எஞ்சிய பதினெட்டு ஆகமங்களைக் கேட்டோர் முப்பத்தறுவர் ஆகின்றனர். அவர் பெயர் முறையே வருமாறு:
அநாதிருத்திரர் (அநாதிருத்திரரை, `மகாருத்திரர்` என்றும் சொல்வது உண்டு.) பரமேச்சுரர் - தசாரணர், பார்வதி - நிதனேசர், பதுமபூ - வியோமர், உதாசனர் - தேசர், பிரசாபதி - பிர மேசர், நந்திகேசர் - சிவர், மகாதேவர் - சர்வான்மர், வீரபத்திரர் - அநந் தர், பிருகற்பதி - பிரசாந்தர், ததீசி - சூலி, கவசர் - ஆலயேசர், இலளிதர் - பிந்து, சண்டேசர் - சிவநிட்டர், அசம்பாதர் - சோமதேவர், நிருசிங்கர் - சீதேவி, உசனர் - தேவவிடி, சம்வர்த்தர் - சிவர், மகா காளர், இவரெல்லாம் `உருத்திரர்` எனப்படுதலின், இப்பதினெட்டு ஆகமங்களும், `உருத்திரபேதம்` எனப்படுகின்றன.
இவர்களுள் ஒருவர் பெயரையே பிறரும் உடையவராய் இருத்தல் பற்றியும், ஆகமங் கேட்டவரல்லாத பிறரது பெயரும் இவர்களுட் சிலர்க்குக் காணப்படுதல் பற்றியும் நாம் மலைவெய்துதல் கூடாது. இவரெல்லாரும் சுத்தாமாயா புவனங்களுள் சதாசிவ புவனத்தில் சதாசிவ மூர்த்திபால் ஆகமங்களைநேராகவும், வழிமுறை யாலும் கேட்டவர் என்க.
ஐந்து முகம் உடைய மூர்த்தி சதாசிவ மூர்த்தியே. அதனால், ``அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டது`` என்றது, இவரிடம் கேட்டதையே என்பதாதல் அறிக. இவரது நிலை மேலே விளக்கப்பட்டது.(தி.10 பா.89 - 90) ``அஞ்சாம் முகத்தில் அரும் பொருள் கேட்டது`` என்பதற்கு ஈடாக, `எஞ்சலில் விஞ்ஞகர் இருபத் தெண்மரும்`` என்று ஓதுவது, தாமே தமக்கு வேண்டியவாறு கட்டிக் கொண்ட பாடம்.
``அரும்பொருள்`` என்றது, மெய்யுணர்வினை. எனவே, `ஆகமங்கள் மெய்ந்நெறியை உணர்த்தும் சிறப்புநூல்` என்பது கூறியவாறாயிற்று. ``பாகத்தன் ஆகமம்`` என்பது, செய்யுட் கிழமைக்கண் வந்த ஆறாவதன் தொகை.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage