
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு
பதிகங்கள்

சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே.
English Meaning:
Agamas TransmittedFrom Siva the Infinite to Sakti and Sadasiva,
To Maheswara the Joyous, to Rudra Deva to
Holy Vishnu and to Brahmisa
So in succession unto Himself from Himself,
The nine Agamas our Nandi begot.
Tamil Meaning:
தடத்த நிலைகளுள் மேலானதாகிய சிவம் நாத தத்துவத்தில் நின்று, தன்னிடத்தினின்று வெளிப்பட்டு விந்து தத்து வத்தில் நிற்கும் சத்திக்கு உணர்த்த, அச்சத்தி தன்னினின்றும் தோன்றிய சதாசிவர்க்கு உணர்த்த, அவர் தம்மிடத்தினின்றுந் தோன்றிய சம்புபட்ச மகேசுரரோடு ஒத்த அணுபட்ச மகேசுரராகிய மந்திர மகேசுரர்க்கு உணர்த்த, அவர் உருத்திரதேவர்க்கும், அவர் தவத் திருமாலுக்கும், அவர் பிரமேசருக்கும் உணர்த்த இவ்வாறு சுத்தமாயையில் உள்ள தலைவர்கள் ஒருவரிடமிருந்து ஒருவராகப் பெற்றுப் பயனடைந்த ஆகமங்களில் சிறப்பாக ஒன்பதை எங்கள் ஆசிரியராகிய நந்தி பெருமான் மேற்குறித்தவாறு சீகண்ட பரமசிவன்பால் பெற்றார்.Special Remark:
``உவமா`` என்பது, `ஒப்பு` என்னும் பொருளதாகிய ஆரியச்சொல். `உருத்திரன், திருமால், பிரமன்` என்போர் சுத்த மாயையில் உள்ளோர் என்பது அறி வித்தற்கு, `உருத்திர தேவர்` என்றும், ``தவமால்`` என்றும், ``பிர மேசர்`` என்றுங் கூறினார். மால் - பெருமையுடையோன். தவமால் - மிக்க பெருமையுடையோன். முதற்கண் கூறியவாறு அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்ட அறுபத்தறுவரும் சதாசிவ புவனத்தில் வாழும் அணுசதாசிவராகலின், இது அவ்வாகமங்கள் கீழ்க்கீழ்ப் புவனங்களில் வந்த முறைமை கூறியவாறு. மந்திர மகேசுரர் ஈசுர தத்துவத்திலும் உருத்திரர் முதலிய மூவரும் சுத்த வித்தியாதத்துவத்திலும் வாழ்வார் என்று அறிக. உருத்திரதேவர்க்கு மந்திர மகேசுரரால் உணர்த்தப்பட்டது எனவே, `சுத்த வித்தையில் அவரோடு ஒப்ப நிற்கும் அனந்த தேவர்க்கும் அவர்வழியாகவே உணர்த்தப்பட்டது` என்பதும், அங்ஙனமாயினும் அனந்ததேவர் சதாசிவரிடமிருந்தே ஆகமங்களைப் பெற்றார் எனச் சில ஆகமங்களில் கூறப்படுதல் முகமனுரை என்பதும் பெறப்படும்.நந்தி பெருமான் ஆகமங்களில் ஒன்பதைச் சிறப்பாகப் பெற்றமையாவது, ஆசிரிய வழிமுறையால் (குருபரம்பரையால்) சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினோராகிய மக்கட்கு விண்ணோர் தமக்கும் விளங்கரிய எல்லா ஆகமங்களின் பொருளையும் எளிமை யாகத் தொகுத்துணர்த்தற் பொருட்டாம். எனவே, அவ்வொன்பது ஆகமங்களுள் ஏனை எல்லா ஆகமப் பொருளும் அடங்கி நிற்றல் பெற்றாம். ``ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு`` (தி.10 ஐந்தாம் தந்திரம்) என்னும் திருமந்திரத்தால் இக்கருத்து வலியுறுத்தப் படுகின்றது. `அவ்வாகமங்கள் இவை` என்பதனை அடுத்துவரும் திருமந்திரத்தால் உணர்த்துவார். `அவற்றை நந்தி பெருமானிடம் கேட்டு உலகிற்கு உணர்த்தினோர் இந் நாயனாரை உள்ளிட்ட எண்மர்` என்பதையும், `இவர் வழியாக மற்றும் பலர் அவற்றை உலகிற் பரப்பினர்` என்பதையும் முன்னே கூறினார் (தி.10 எட்டாம் தந்திரம்) இன்னும் சனற்குமார முனிவர் கேட்டுச் சத்திய ஞான தரிசனிகள் நில வுலகில் வழியாகப் பரஞ்சோதிமாமுனிவர்க்கும், அவர்வழியாக திரு வெண்ணெய்நல்லூரில் `சுவேதவனப் பெருமாள்` என்னும் பிள்ளைத் திருநாமத்துடன் எழுந்தருளியிருந்த மெய்கண்ட தேவர்க்கும் உணர்த்தற்ப்பட்டு, அவர் வழியாகப் பலவிடத்தும் ஆகமப்பொருள் விளங்கிவருதல் அம் மரபினராகிய உமாபதிதேவ நாயனார் அருளிச் செய்த சிவப்பிரகாச நூலாலும், பிறவற்றாலும் நன்கறியப்பட்டது.
`சிவபெருமான் ஆகமங்களைப் பிரதி சங்கிதை முறையால் (ஒவ்வொருவர்க்கு ஒவ்வொன்றாக வகுத்துக் கூறும் முறையால்) பிரணவர் முதலிய இருபத்தெண்மர்க்கும் நேரே உணர்த்தி, மகௌக முறையால் (எல்லாவற்றையும் ஒருவர்க்கு ஒருங்கு தொகுத்துக் கூறும் முறையால்,) அனந்த தேவர் வாயிலாகச் சீகண்டருக்கு உணர்த்த, அவர் நந்திபெருமானுக்கும் அவ்வாறே அனைத்தையும் உணர்த்தி னார்` என ஆகமங்களில் கூறப்படுதலால், ``நவ ஆகமம் எங்கள் நந்திபெற்றானே`` என இங்கு நாயனார் அருளிச்செய்ததற்கு, குருபரம்பரையால் நிலவுலகிற்குத் தருமாறு உணர்த்தப்பட்டவை ஒன்பது` என்பதே கருத்தாதல் அறிக.
ஆகமங்களைச் சிவபெருமானிடம் நேரே கேட்டவர் மந்திர மகேசுரர் ஆதலின் அது `அதிபர சம்பந்தம்` என்றும், மந்திர மகேசுரரிடம் அனந்ததேவர் கேட்டது `பர சம்பந்தம்` என்றும், அனந்த தேவரிடம் சீகண்டர் கேட்டது `மகா சம்பந்தம்` என்றும், சீகண்டரிடம் நந்திபெருமான் கேட்டதும், திருமால் முதலிய தேவர்கள் கேட்டதும் `அந்தராள சம்பந்தம்` என்றும், நந்தி பெருமானிடத்தும், திருமாலி டத்தும், மற்றைய தேவர்களிடத்தும் முனிவர்களும் சித்தர்களும் கேட்டது `திவ்வியசம்பந்தம்` என்றும், தேவர்களிடமும், முனிவர்களிடமும் மக்கள் கேட்டது `திவ்வியாதிவ்விய சம்பந்தம்` என்றும், மக்களிடம் மக்கள் கேட்டது `அதிவ்விய சம்பந்தம்` என்றும் சொல்லப் படுகின்றன.
`வேதம், சிவாகமம்` என்னும் இரண்டும் `ஆப்த வாக்கியம்` எனப்படுகின்றன. `ஆப்தன்` என்பதற்கு, `உள்ளது கூறுவோன்` என்பது பொருள். பொதுமக்கட்கு நன்மக்கள் ஆப்தர். நன்மக்கட்கு முனிவர்களும், தேவர்களும் ஆப்தர். முனிவர்கட்கு நந்தி பெரு மானும், தேவர் கட்குப் பிரமதேவரும் ஆப்தர். நந்திதேவர், பிரம தேவரினின்று மேன் மேல் உள்ளவர் கீழ்க்கீழ் உள்ளவருக்கு ஆப்தர். எல்லார்க்கும் ஆப் தராய்த் தமக்கோர் ஆப்தர் இல்லாத அதிபரமாப்தர் சதாசிவ நாயனார். அவர்க்குமேல் உள்ள சத்தியும், சிவமும் இலய நிலை (ஒடுக்கநிலை) ஆதலின், அங்கு வேத சிவாகமங்கள் விளங்கித் தோன்றுதல் இல்லை.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage