
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 11. சிவானந்தக் கூத்து
பதிகங்கள்

தானந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்
தேனுந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்
ஞானம் கடந்த நடம்செய்யும் நம்பிக்(கு) அங்(கு)
ஆனந்தக் கூத்தாட ஆடரங் கானதே.
English Meaning:
Ananda Dance1 is Honey-SweetEndless is She,
Sakti of abiding Bliss;
With Her He dances the Ananda Dance
Honey-sweet it is;
You have witnessed it;
And having witnessed it,
Dance transcending knowledge all;
You, then, become the arena
For Lord`s Ananda Dance to perform.
Tamil Meaning:
மேற்கூறிய ஐவகைக் கூத்துக்களுள் சிவானந்தக் கூத்தாவது, என்றும் அழிதல் இல்லாமையால் சத்தாய், அதனோடே சித்தாய், ஆனந்தமாய் உள்ள சத்தியிடமாக நின்று ஆனந்தத்தை முடிவின்றிப் பொழியும் கூத்தாகும் ஆகவே, ஆன்ம அறிவைக் கடந்து அந்தக் கூத்தினை இயற்றும் சிவனுக்கு அவ்விடத்தில் அந்த நடனத்தைச் செய்தற்கு அரங்காய் நிற்பது மேற்கூறிய அந்தச் சத்தியே.Special Remark:
`பரா சத்தி` என்பது உணர்த்துதற்கு, `சத்தாயும், ஆனந்தமாயும் உள்ளது` என்றார். அதனானே சித்தாதலும் தழுவப்பட்டது. `சத்தாவது உள்ளது` என்று மட்டும் கூறுவாரை மறுத்துச் சித்தாந்தம் கூறுதற்பொருட்டு, தோற்றக் கேடுகள் இன்றி உள்ளது` என்பார். ``தான் அந்தம் இல்லாச் சத்தி`` என்றார். அந்தம் இன்மை கூறவே, ஆதியின்மையும் பெறப்பட்டது. `ஆன்ம அறிவைக் கடந்து தன்னியல்பில் நிற்கும் சத்தியே பராசத்தி` என்றற்கு ``ஞானம் கடந்து`` என்றார். `அவ்வானத்தக் கூத்து` எனச்சுட்டு வருவிக்க. ``ஆடரங்கு`` என்பதில் ஆடுதல் வாளா பெயராகி நின்றது. `ஆனது அந்தச் சத்தியே` எனப்பயனிலை வருவித்து முடிக்க.``ஆனந்த மாநடம்`` என்பதை முதலிற் கூட்டுக. கண்டீர், முன்னிலையசை. `சத்திமேல் நிகழ்ந்து` என ஒருசொல் வருவிக்க. ``உந்தும்`` என்பது கூறப்பட்டது.
எனவே, இது பரமுத்தியை அடைந்த ஆன்மாக்கட்கு அந்நிலையில் பராசத்தி வழியாகப் பேரானந்தத்தை இடையறாது தந்து கொண்டிருக்கும் கூத்தாதல் விளங்கும்.
``மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத்
தானந்த மானிடத்தே தங்கியிடும் - ஆனந்தம்
மொண்டருந்தி நின்றாடல் காணும், அருள் மூர்த்தியாக்
கொண்டதிரு அம்பலத்தான் கூத்து``
``பரையிடமா நின்றுமிகு பஞ்சாக் கரத்தால்
உரைஉணர்வுக் கெட்டா ஒருவன் - வரைமகள்தான்
காணும் படியே கருணைஉருக் கொண்டாடல்
பேணுவர்க் குண்டோ பிறப்பு``
என்பவற்றால் அறிக.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage