
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 19. முப்பதம்
பதிகங்கள்

தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்
நம்பிய சீவன் பரன் சிவ னாய்நிற்கும்
அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.
English Meaning:
Tvam-Tat-AsiIn States, Tvam-Pada, Tat-Pada and Asi-Pada
Jiva stands as Jiva, Para and Siva
In order respective;
Beyond them is the Svarupa Mahavakya (Supreme Word Manifest)
(Tvam-Tat-Asi);
Revealing that Truth,
Nandi accepted me in His Grace.
Tamil Meaning:
அழகிய சொற்களால் ஆகிய, பழமையான, மெய்ம்மை கூறும் மகாவாக்கியம் `தொம், (துவம்) தத், அசி` என்னும் மூன்று சொற்களை யுடையது. அச்சொற்கள் முறையே புத்தி முத்திகளை விரும்புகின்ற சீவன், பரம்பொருள், அதன் சத்தி ஆகியவற்றைக் குறித்து நிற்கும். அவ்வாக்கியத்தைப் பன்முறையும் உணர்தலால் அடையப்படும் செவ்விய பொருள், குருவாகி வந்து ஆட்கொள்கின்ற சிவனே.Special Remark:
மூன்றாம் அடியை முதற்கண் கூட்டியுரைக்க.`பத வாக்கியம்` என இயையும். வாக்கியம் சாதனம் ஆகலின், செம்பொருள், அதனால் அடையப்படும் பொருளாயிற்று. செம்மை, எஞ்ஞான்றும் திரிபின்றி ஒருதன்மைத்தாய் நிற்பது. இதுவே, வடமொழியில் `சத்து` என்பதற்குப் பொருள் என்பது சித்தாந்தம்.
இதனால், `முப்பத வாக்கியம் மெய்ப்பொருளை அடையும் வழி` என்பதும், அதனால், அடையப்படும் மெய்ப்பொருள் சிவனே என்பதும் கூறப்பட்டன. இரண்டாம் அடி அனுவாதமாய், மேலெல்லாம் கூறியதை வலியுறுத்திற்று.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage