
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்
பதிகங்கள்

பாருக்குக் கீழே பகலோன் வரும்வழி
யாருக்கும் காணஒண் ணாத அரும்பொருள்
நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்
ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே.
English Meaning:
Sun`s Route InsideBelow the Earth Centre that is Muladhara
The Sun its route takes;
Invisible indeed is he,
Between the Fiery Centre (Manipura)
And the Watery Centre (Svadhishtana) within.
Tamil Meaning:
ஆதித்தன்மேல் எழுந்துவருகின்ற வழி நிலத்திற்குக் கீழே யாருக்கும் அறிய ஒண்ணாத அரும்பொருளாய் உள்ளது. (ஆதலின் அதனை அறிய முயல வேண்டுவதின்று.) இனிக் கண்ணிற்கு நன்கு புலனாயினும் யாராலும் அணுகிப் பற்ற இயலாத ஆதித்தன் புறப்பட்டுத் தோன்றுதல் நீருக்கும், தீக்கும் நடுவேயாகும்.Special Remark:
ஆதலின் அது முதலாக அவனைக் காண்க என்பதாம். இஃது ஆதித்தன் புறத்தும், அகத்தும் நிற்றலாகிய இரண்டிற்கும் பொருந்தக் கூறியதாம். மாலையில் மறைந்த ஆதித்தன் காலையில் புறப்படும்பொழுது நிலத்திற்குக் கீழ் நின்று புறப்படுதலால் அவ்விடம் நிலத்தின்கண் உள்ளவரால் அறிய இயலாதாம். இனி அவன் புறப்படும்பொழுது கடல் நீரைக் கிழித்துக்கொண்டு வடவா முகாக்கினி உள்ள இடத்திற்கு வேறான இடத்திற் புறப்படுவான். அப்பொழுதும் அவனை யாரும் கண்ணால் காணலாமன்றி, அருகில் சென்று கையால் பற்ற இயலாது. இஃது அவன் புறத்து நிற்கும் நிலை. இனி அகத்தில் ``பார்`` என்றது, பூமியின் அடையாள வடிவமாகிய சதுரத்தைத் தனது வடிவமாக உடைய மூலாதாரத்தை. அதற்கும் கீழே ஆதித்தன் முக நுண்ணிலையில் நிற்றலால் அஃது யாராலும் அறியப் படாதாம். ``நீர்`` என்றது சிறுநீர் தங்கும் இடமாகிய மணிபூரகத்தை. ``தீ`` என்றது; பிராணவாயுவின் கும்பகத்தால் மூளத்தக்க அக்கினியை உடைய மூலாதாரத்தை - இவ்விரண்டிற்கும் நடுவாவது சுவாதிட் டானம். அங்கு நுண்ணியனாய்ப் புலப்படுதலின் அதனை அவன் உதிக்கும் இடமாகக் கூறினார் எனினும் அவனை நன்கு புலப்படக் காணுதல் மேல், ``ஆன முக்கோணத்தில்`` எனக் கூறியது முதலிய இடங்களிலேயாம். `இவ்விரு நிலையிலும் ஆதித்தனைப் பிடிக்க முயலாமல் கண்ணால் கண்டு வணங்குங்கள்` என்றபடி.இதனால், ஆதித்தனால் பயன்பெறும் முறை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage