
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 18. பூரணக் குகைநெறிச் சமாதி
பதிகங்கள்

செத்தார் பெறும்பய னாவதி யாதெனில்
செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில்
செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்
செத்தார் சிவமாய திண்சித்தர் தாமே.
English Meaning:
Siddhas even when Dead in Body are Alive in AwarenessBlessed indeed are those who die
If in death they unite one with Lord;
Then, even dead, alive are they;
They who are dead like the Impurities Three
Are Siddhas true,
Siva they become.
Tamil Meaning:
`பிறந்தவர் இறத்தல் இயல்பு என்னும் அம் முறை யிலே இறந்தவர் என்ன பயனைப்பெறுவர்` என வினவில் அம்முறை யில் இறந்தவர் அடையும் பயன் அந்த இறப்பைத் தவிர வேறில்லை. (என்றதில், `அவர் சிறப்பாக அடையும் பயன் வேறில்லை` என்றபடி) இனிப் பொதுவான யோகத்தைச் செய்து அதன் பயனாகச் சித்திகளைப் பெற்றவர் இறந்தாரானால், அவரது புகழ் உலகில் இறவாதிருக்கும். ஆகவே, மும்மலங்களும் கெடப்பெற்றோரே வாழ்விலும், வாழ் விற்குப் பின்னரும் சிவமாய் நிற்கும் சிறந்த பேற்றை உடையராவர்.Special Remark:
``செத்தார்`` என அமங்கலமாகவே கூறியதனால், அது பிறந்த பல உயிரும் இறக்கும் இறப்பினை எய்திநின்றோரையே குறித்தது. வினாவியவருக்கு இறுக்கப்படும் விடையை வெகுளியால் அவர்மீதே வைத்து, ``நீர்`` என முன்னிலையாற் கூறினார். வெகுளி, வாளாதே பயன்பெற விழைதல் பற்றி எழுந்தது. சேர்வு+அது` என்க, சேரப்படும் பயனைச் சோர்வு என்றார். `அதுவே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. சித்தி, `சித்து` எனவும் படும். புகழுடம்பு நிலைத்து நிற்க இறத்தலை, ``உளதாகும் சாக்காடு``l என்ப ஆதலின், ``இருந்தார்`` என்றார். `இருந்தாரே` என்னும் தேற்றேகாரமும் தொகுத்தலாயிற்று. `செகத்தில் இருந்தாரே` என்க. `வாளா இறந்தார் பெறும் பயன் யாது` என வினாவினார்க்கு, `பிறந்தோர் யாவரும் புகழோ, ஞானமோ இரண்டில் எதனையாவது எய்தல் வேண்டும்` என்றற்கு, யோகியரும், ஞானியரும் பெறும் பயனை உடன் எடுத்துக் கூறினார். சிறந்த சித்தியாவது முத்தியே யாதல் பற்றி, முத்தியும் சில விடத்து, `சித்தி` எனப்படுதல் பற்றி, முத்தி எய்துவோரை, `சித்தர்` எனக் கூறுகின்றவர் ``திண்சித்தர்`` எனச் சிறப்பித்துக் கூறினார்.இதனால், வாளா வாழ்ந்து நாள் கழிப்பவர் வாழ்வு முடிந்த பின்னர் யாதொரு பயனும் எய்தாமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage