
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 3. ஞாதுரு ஞான ஞேயம்
பதிகங்கள்

நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்கார நீங்கி அதனிலை நிற்கவே
நீங்கா அமுதம் நிலைபெற லாமே.
English Meaning:
Goal of Sivananda is Ambrosial BlissDo incessant seek the goal of Sivananda,
There the Primordial Pasa enmeshes you not;
When it ever envelops you,
You but throw your egoity out and stand firm;
Yours shall then be the ambrosial bliss eternal.
Tamil Meaning:
ஞானம் கைவரப் பெற்றவன் அந்த ஞானத்தால் அறியும் பொருள் சிவமே யாகையால், அஃது ஒன்றே அவனுக்கு ஞேயப் பொருளாம். அந்தப் பொருள் ஆனந்தமே வடிவினது ஆகையால், என்றும் நீங்குதல் இல்லாத சிவானந்தத்தையுடைய அந்த ஞேயப்பொருளிலே ஞானி ஒரு பொழுதும் நீங்காதே நிற்பானாயின், அநாதி தொட்டு அவனைவிடாது சூழ்ந்து நிற்கமாட்டாவாய் அகன் றொழியும். அவை முற்ற அகன்றொழியாது ஒரோவொருகால் சிறிய வாய் வந்து சூழுமாயினும் அச்சூழல், அவனை முன்போல அஞ் ஞேயப் பொருளை மறந்தொழியும் நிலையை எய்துவிக்கமாட்டா. (ஏனெனில், சிவகுருவின் அருளைப் பெற்ற சிவஞானியின் ஞானத்தை அப்பாசங்கள் முன்போலத் திரிவு படுத்தி, `யான்` என்றும், `எனது` என்றும் செருக்கு விக்கமாட்டா ஆகலான்.) அவ்வாற்றால் பழக்கம்பற்றிச்சிறிதே தலைப்படுகின்ற அந்தச் செருக்கு ஞானத்தால் முற்றாது கழிய, ஞேயத்தில் நிலைத்து நிற்றல் உண்டாகும். அதனால் அத்தகைய சிவஞானிக்கு, அளவிற்பட்டு நீங்குதல் இல்லாது என்றும் உளதாகிய சிவானந்தம் நிலை பெற்றிருத்தல் கூடுவதாம்.Special Remark:
``நீங்காச் சிவானந்த ஞேயம்`` என்பது உடம்பொடு புணர்த்தது ஆகலான், அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. ``நிற்க`` என்னும் எச்சம், விதித்தற் கருத்தன்று இயல்பு கூறியதே. `ஆங்காரம் நீக்கி` எனப் பிறவினையாகக் கூறாது. ``நீங்கி`` எனத் தன்வினையாகக் கூறியது அது பற்றியே. `நீங்கி`` என்பதை `நீங்க` எனத் திரிக்க. `அதன்கண் நிலை நிற்க` என உருபு விரித்துக் கொள்க. ``நீங்கா அமுதம்`` வெளிப்படை.``சிவானந்த ஞேயம்`` என்றதனால், ``ஞேயமாவது சிவம்` என்பது போந்தது. போதரவே, ``நின்றிட, நிற்க`` என்பவற்றால், `நிற்றல் சிவஞானத்தால்` என ஞானமும், `நிற்பவன் அந்த ஞானத்தை யுடையவன்` என ஞாதுருவும் பெறப்பட்டு, `ஞாதுருதன்னையும், தனது ஞானத்தையும் சிறிதும் எண்ணாது` ஞேயம் ஒன்றையே அறிந்து அதனால் `அதனை அறிகின்றோம் என்ற அறிவும் நீங்கிய நிலையே ஆனந்த நிலையாம் என்பது விளங்கிற்று. இதனையே, `அதீத நிலை` என்றும், `ஆனந்தாதீதம்` என்றும் கூறுவர். இந்நிலையில் ஞாதுரு ஞானஞேயங்கள் இருந்தும் அவை அவற்றை அறிபவனுக்குப் புலனாகாமையால், இந்நிலையை, `திரிபுடி நீங்கிய நிலை` என்பர். அஃது அறியாது, `ஞாதுரு ஞானங்களை ஞேயத்தின் வேறுபட்ட பொருளாக உணர்தலே மயக்க உணர்வாகிய அஞ்ஞானம்` என்றும், `அங்ஙனம் உணராது அவை அவிச்சையால் ஞேயத்தின் வேறுபட்ட பொருள்போலத் தோன்றுகின்றன அவை உண்மையில் ஞேயமாகிய அதுவேயாம் என்று உணரப்பெறுதலே மெய்ஞ்ஞானம்` என்றும் கூறித் தமது அறிவின் நிலையைப் புலப்படுத்திக்கொள்வர் மாயாவாதிகள், அவர் தமது கூற்றால், பெறுவானையும், பேற்றையும் இழத்தல்தெளிவு. இனி, `ஞாதுரு ஞானங்களைப் பெத்தத்திற்போலவே முத்தியிலும் உணர்ந்து நிற்றலே ஆனந்தானுபவம்` என்போரும் இடையீடில்லாத முத்தி யின்பத்தினராகாது, இடையிடையே பெத்தத் துன்பத்தை உடையவராவர். இவற்றையே உமாபதி தேவர் தமது வினா வெண்பாவில், 1.
``காண்பானும் காட்டுவதும் காண்பதுவும் நீத்துண்மை காண்பார்கள் நன்முத்தி காணார்கள் - காண்பானும்
காட்டுவதும் காண்பதுவும் தண்கடந்தைச் சம்பந்தன்
வாட்டுநெறி வாரா தவர்``
என அருளிச்செய்தார். இதனுள் காட்டுவது, ஞானம். காண்பது - காணப்படுவது.
இதனால், அதீத நிலையாகிய முடிந்தநிலையில் உளவாகும் ஞாதுரு முதலிய மூன்றன் இயல்புகளும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage