
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 5. சரியை
பதிகங்கள்

சமையம் பலசுத்தி தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடம் அரன்மந் திரசுத்தி
சமையுநிரு வாணங் கலாசுத்தி யாகும்
அமைமன்னு ஞானமார்க் கம்அபி டேகமே.
English Meaning:
Ordination Rites for the Four PathsSamaya is the ordination rite for self-surrender in Chariya
Visesha, the rite for incantation of Siva Mantra in Kriya
Nirvana helps Kalas purification in Yoga
And Abhisheka for Grace to reach in Jnana.
Tamil Meaning:
வீட்டு நெறிளாகிய சரியை முதலியவைகளில் நிற்க விரும்புவோர், ஆசிரியரை அடைந்து தீக்கை பெற்று நின்ற வழியே அவை உண்மைச் சரியை முதலியனவாய்ப் பயன்தரும். அத்தீக்கை, `சமயம், விசேடம், நிருவாணம், அபிடேகம்` என நான்கு வகைப்படும்.சமய தீக்கை தூல உடம்பைப் பல வகையில் தூய்மைப் படுத்து வதாகும். அதன் பயனாக, மாணவன், இது காறும் எல்லாச் செயல் களையும் தன்னால் ஆகின்றனவாகவேயாக மயங்கியிருந்த மயக்கம் நீங்குமாறு. `எல்லாம் அவன் செயல் (சிவன் செயல்)` ஆதலை உணரும் வாய்ப்பினைப் பெறுவான். அதனை அடுத்துச் செய்யப்படும் விசேட தீக்கை சிவமந்திரங்களைப் பீசங்களோடு கூட்டி உபதேசித்து, அதனால் பெரும்பயன் அடையச் செய்வதாகும். சாந்தத்தை உடைய நிருவாண தீக்கை, `நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தி யாதீதை` என்னும் கலைகள் ஐந்தில் ஏனைய பொருட் பிரபஞ்சம், சொற்பிரபஞ்சங்களாய் அடங்கியுள்ள அத்துவாக்களிடமாக நிற்கும் சஞ்சித கன்மங்களை ஆகுதிகளால் அழித்து, மாணவனது ஆன்மாவை நின்மலம் (மாசற்றது) ஆக்குவதாம். அதற்குமேல் உள்ள அபிடேகம்` ஆசிரியராய் விளங்கிப் பிறர்க்கும் தீக்கை செய்தற்கு உரிய பெரிய ஞானத் தகுதியுடையவர்க்கு அவ் ஆசிரியத்தன்மையை அபிடேகம் செய்து அளிப்பது.
Special Remark:
சமய தீக்கை பெற்றவன், `சமயி` எனப் பட்டுச் சரியையில் நிற்றற்கு உரியன், `இந்நிலையில் கணிக்கப்படும் மந்திரங்கள் நிர்ப்பீசம்` என்னும் கொள்கை பற்றி இதனை நாயனார் `மந்திரசுத்தி` என்னாராயினார். எனினும், இங்கும் மந்திரங்களைச் சபீசமாகச் சொல்லும் வழக்கமும் காணப்படுகிறது. விசேட தீக்கையில் மந்திரங்கள் சபீஜமாகச் சொல்லும் அதிகாரத்தைத் தந்து, கிரியையிலும் யோகத்திலும் நிற்பித்தலால் இதனையே ``மந்திர சுத்தி`` என்றார். மந்திரம் ஆறத்துவாக்களில் ஓரத்துவாவேயாம். நிருவாண தீக்கையில் மட்டுமே ஏனை ஐந்தத்துவாக்களையும் அடக்கியுள்ள கலைகளைச் சுத்தி செய்து சஞ்சித கன்மம் துடைக்கப்படுதலால், அதனையே ``கலா சுத்தி`` என்றார். நிர்ப்பீசம் - பீசாக்கரங்களோடு கூடாதது - சபீசம் - பீசாக்கரத்தோடு கூடியது. `சமயம், விசேடம், நிருவாணம்` என்னும் மூன்றிலும் `நிர்ப்பீசம், சபீசம்` என்னும் இரண்டும் உள என்றலும், சமயம் நிர்ப்பீசமே; ஏனைய இரண்டும் சபீசமே, என்றலும் ஆகிய இருவேறு கொள்கைகளும் ஆகமங்களில் உள என்பர். `சபீச தீக்கை உயர்ந்தோர்க்கே செய்யப்படும்` என்பது ஒரு படித்தான கொள்கை யாகையால், `விசேடமும், நிருவாணமும் சபீசமே` என்னும் கொள்கை யில் `அவ் இரு தீக்கையும் உயர்ந்தோர்க்கே செய்யப்படுவன` என்பது விதியாய் அமையும். ``அமை மன்னும்`` என்பதற்கு. `அமைந்து நிலைபெறும்` எனப் பொருள் உரைக்க.இதனால், சரியை முதலியவற்றைக் கூற எடுத்துக் கொண்ட நிலையில் அவற்றிற்கு உரிமையைத் தரும் தீக்கை வகைகள் இம்முதல் அதிகாரத்தில் சொல்லப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage