
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 5. சரியை
பதிகங்கள்

உயிர்க்குயிர் ஆய்நிற்றல் ஒண்ஞான பூசை
உயிர்கொளி நோக்கல் மகாயோக பூசை
உயிர்ப்புறும் ஆவாகனம் புறப் பூசை
செயிர்க்கடை நேசம் சிவபூசை யாமே.
English Meaning:
Jnana, Yoga, Kriya and Chariya DefinedTo be one, Life within Life — that the luminous path of Jnana;
To seek the Light within Life — that the mighty path of Yoga;
To invest image with Life — that the external way of Kriya
To adore Siva in love — that the basic worship of Chariya.
Tamil Meaning:
உயிர்க்கு உயிராய் உள்ள பொருளை ஆராய்ந் தறிவது ஞானபூசை. உயிர்க்கு உணர்வுண்டாக்குகின்ற பிரணவத்தைப் பல வகையாலும் காணுதல் பெரியயோக பூசை. புறத்தில் விளங்கும் மூர்த்தி உயிருடையதாகும்படி மூர்த்திமானை அதன்கண் வருவித்துச் செய்தல் புறப் பூசை. இனிக் குற்றந் தீர்ந்த அன்புடன் செய்வனயாவும் சிவனுக்குச் செய்யப்படும் பூசையாம்.Special Remark:
அதனால், `அன்பின்றி நிகழின் இங்கு எடுத்தோதப் பட்டனவும் பூசை யாதலில்லை` என்றதாம்.``நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்;
பொக்கம் மிக்கவர் பூவும்நீ ருங்கண்டு
நக்கு நிற்பன் அவர்தம்மை நாணியே`` 1
எனவும்,
``அன்பேஎன் அன்பேஎன் றன்பால் அழுதரற்றி
அன்பேஅன் பாக அறிவழியும் - அன்பன்றித்
தீர்த்தந் தியானம் சிவார்ச்சனைகள் செய்யுமவை
சாத்தும் பழமன்றே தான்`` 2
எனவும் போந்தன காண்க. இதனுள் யாவற்றையும் ``பூை\\\\u2970?`` என்றே குறித்தலின், `பசுக்களாகிய உயிர்கள் பதியாகிய இறைவன் எவ்வாற்றாலும் வழிபட்டு நிற்றலே சைவத்தில் உள்ள உய்யும் நெறி` என்பது விளங்கும். `அவ்வழிபாடுதான், `ஞான யோகக் கிரியா சரியைகள்` என நான்காய் நிற்கும்` என்பது அம்முறையானே கூறப்பட்டது. முதல் மூன்று அடிகளிலும் முறையே ஞானம் முதலிய மூன்றனையும் கூறி, `அவையல்லாத பிறவெல்லாம் சரியையாம்` எனப் பொதுப்படக் கூறினார் என்க. `பிராசாத யோகம்` என்பார், ``மகா யோகம்`` என்றார். ``ஆய் நிற்றல்`` என்பது, `ஆய்` என்னும் முதனிலை, `ஆய்ந்து` என வினையெச்சப் பொருள் தந்தது. `உயிர்ப் பெறும்` என்பது பாடமாயின், `பகரஒற்று விரித்தல்` என்க. செயிர் - குற்றம். `அறன்கடை` என்பது அதன் மறுதலையைக் குறித்தல் போல, `செயிர்க்கடை` என்பது அதன் மறுதலையைக் குறித்து.
இதனால், சைவத்தின் ஒழுகலாறு நால்வகைத்தாதலும், அவற்றின் இயல்பும் தொகுத்துக் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage