
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 12. புவனாபதிச் சக்கரம்
பதிகங்கள்

ககாராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை
அகாராதி ஓர் ஆ றரத்தமே போலும்
சகாராதி ஓர்நான்கும் தாம்சுத்த வெண்மை
ககாராதி மூவித்தை காமிய முத்தியே.
English Meaning:
Fifteen Letters of the ChakraThe five letters beginning with ``Ka`` are golden hued to behold
The six letters beginning with ``A`` are red-hued
The four letters beginning with ``Sa`` are pure white
The mantras thus grouped lead to bliss below
And to liberation above.
Tamil Meaning:
மேல் (1158) \\\"தக்க பராவித்தை\\\" என்னும் மந்திரத்தில் சொல்லப்பட்ட `ஷ்ரீவித்தை` எனப்படும் பராவித்தையை மேற்கொள்ள மாட்டாத மெலியோர்க்கு அமைந்தது இச்சக்கரம் என்பது உணர்த்துதற்கு முதல் நான்கு மந்திரங்களால் ஷ்ரீ வித்தையின் இயல்பே கூறுகின்றார். ககாரத்தை முதலில் உடைய ஐந்தெழுத்துக் களும் பொன்னிறம் உடையன; ஹகாரத்தை முதலில் உடைய ஆறெழுத்துக்களும் செந்நிறம் உடையன; ஸகாரத்தை முதலில் உடைய நான்கெழுத்துக்களும் தூய வெண்ணிறம் உடையன. ககாரத்தை முதலில் உடையது முதலிய இம்மூன்று வித்தைகளும் `போகம், மோட்சம்` என்னும் இரு பயன்களையும் தருவனவாம்.Special Remark:
ககாரத்தை முதலில் உடைமை பற்றி இவ்வித்தை (ஷ்ரீவித்தை) `காதி வித்தை` என்றும் சொல்லப்படுகின்றது.ககாரதி ஐந்தாவன: `க, ஏ, ஈ, ல, ஹ்ரீம்` என்பன. ஹகாரத்தையே தமிழ் முறையால், \\\"அகாரம்\\\" என ஓதினார். ஹகாராதி ஆறாவன; `ஹ, ஸ, க, ஹ, ல, ஹ்ரீம்` என்பன. ஸகாரத்தையே அவ்வாறு \\\"சகாராதி\\\" என்றார். ஸகாராதி நான்காவன; `ஸ, க, ல, ஹரீம்` என்பன. இப்பதினைந்தெழுத்தின் தொகுதி, `பஞ்ச தசாட்சரி` எனப்படும்.
சத்திக்குரிய மந்திரங்களில் தலையானதாகக் கொள்ளப் படுவது, `லலிதா திரிசதி தோத்திரம்` என்னும் முந்நூறு நாமங்கள் கொண்ட கோவை. அந்நாமங்கள் இங்குக் காட்டிய எழுத்துக்களில் ஒவ்வொன்றை முதலாகக் கொண்டு ஓரெழுத்திற்கு இருபதாக (15X20)முந்நூறு உள்ளன. எனவே, அவற்றின் முதலெழுத்துக் களின் தொகுதியே இப்பஞ்ச தசாட்சரியாம்.
இப் பதினைந்தெழுத்தும் இம்மந்திரத்திற் சொல்லப்பட்ட வாறு மூன்று பகுதிகளாகக் கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியும் `ஹ்ரீம்` என்பதை ஈற்றில் கொண்டு நிற்றல் அறியத் தக்கது. இம்மூன்று பகுதிகளும் முறையே, `வாக்பவ கூடம், காமராஜ கூடம், சத்தி கூடம்` எனப்படுகின்றன. இம் மந்திர மாலையின் பெருமை. இப்பகுதிகளின் பெருமை. இவ் வெழுத்துக்களின் பெருமை முதலி யவை இம்மாலையின் பூர்வ பாகம், `வரிவஸ்யாரகசியம்` என்னும் நூல் முதலியவற்றில், பலவாகச் சொல்லப்படுகின்றன. இவற்றிற்கு முதல் நூல், `திரிபுரை` என்னும் சத்திக்குரிய உபநிடதமாகிய திரிபுரோபநிடதமாம்.
`இப் பஞ்ச தசாட்சரி மந்திரம் காயத்திரியின் மற்றொரு வடிவம்` எனவும், இன்னும், `பொதுவாக யாவராலும் அறிந்து சொல்லப்பட்டு வரும் காயத்திரியினும் இது மிக மேலானது` எனவும், `காயத்திரியை வெளிப்படையாகக் கூறும் வேதம், இதனை அவ்வாறு கூறாமல், மிக மறை பொருளாகச் சில சங்கேத (குறியீட்டு)ச் சொற் களால் கூறுகின்றது எனவும், இங்ஙனமாகவே, இவ் எழுத்துக்களைக் கொண்ட லலித திரிசதி தோத்திர வழிபாடே எல்லா வழிபாட்டின் பயனையும் தந்து, `ஸர்வ பூர்த்திகரி` யாகின்றது எனவும் கூறுவர். இம்மந்திர வழிபாட்டிற்குரிய ஷ்ரீ சக்கரம் பற்றி மேற்குறித்த பரா வித்தை கூறிய இடத்தில் சொல்லப்பட்டது. `ஷ்ரீ0` என்பது இலக்குமி பீசம் எனவும், இதனை இவற்றோடு கூட்டி சோடசாட்சரியாகக் கொள்வது மிக உயர்ந்தோர்க்கு உரியது எனவும் கூறுவர். இவ் அக்கரத்தை நாயனார் புவனாபதி சக்கரத்திற்குக் கூறுகின்றார்.
`வாக்பவ கூடம்` முதலிய மூன்று பகுதிகளில் நிறங்கள் வரிவஸ்யரகசியத்தில் முறையே, `பிரளய கால அக்கினியின் நிறம், கோடி சூரியப்பிரகாச நிறம், கோடி சந்திரப்பிரகாசநிறம்` எனச் சொல்லப்பட்டன. அவற்றை நாயனார் இங்குக் கூறியவாற்றோடு இயைவனவாகக் கொள்ளுதலே ஏற்புடைத்து, `கண்ட` என்பது இங்கு, `காணிய` எனத்திரிந்து நின்றது. காமிய முத்தி, உம்மைத் தொகை. `போலும்` என்பது உரையசை. இவற்றைத் தருவனவற்றை ஒற்றுமை பற்றி இவையாகவே கூறினார்.
இதனால், சத்தி வழிபாடாகிய ஷ்ரீவித்தைக்குரிய சிறந்த பஞ்ச தசாட்சர மந்திரத்தின் சிறப்புக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage