
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 15. மூவகைச் சீவ வர்க்கம்
பதிகங்கள்

இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை
இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்
இரண்டாகு நூற்றெட் டுருத்திரர் என்பர்
முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே.
English Meaning:
Of the Pralayakalas three,Are those who Mukti attained;
Another, by malas twain (Egoity and Karma) bound;
Yet another, the Rudras Hundred and Eight;
The Sakalas have all malas three.
Tamil Meaning:
இனிப் பிரளயாகலர் மூவராவார், `அபக்குவரும், பக்குவரும்` என இருதிறப்படும் நிலையில் பக்குவர், `சுத்தவித்தையில் நின்று அசுத்த மாயா புவனங்களைக் காவல் செய்பவரும், குண தத்துவத்தில் நின்று பிரகிருதி மாயா புவனங்களைக் காவல் செய்பவரும், எனத் தனித்தனி நூற்றெண்மராம் உருத்திரர்களாவர். எனவே, இவ்விருவரோடு, பெத்தராகிய அபக்குவரும் கூடப் பிரளயாகலர் மூவராகின்றனர். இனிச் சகலராவார் ` ஆணவம், கன்மம், மாயை` என்னும் மும் மலமும் உடையவரே.Special Remark:
``இரண்டாவதில் முத்தி எய்துவார்`` என்றது, `அடுத்த படைப்பில் முத்தி எய்துபவர்` என்றவாறு. எனவே, இது `பிரளயாகலர்` என்னும் பொருளதாயிற்று. எய்துவார்`` என்றது பெயர். அத்தனை - அத்துணையர், அஃதாவது `இரண்டாவது` என்பதில் அமைந்த `இரண்டு` என்னும் துணையினர். `அத்தனை யராவர் பெத்தரும், உருத்திரரும் என்பர்` என முடிக்க. மீள ``இரண்டாவதுள்ளே`` என்றது, பிரளயாகலர் என்னும் வகையுள்` என்றவாறு. ``உருத்திரர்`` என்பதன்பின் `உளர்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. முரண் - (ஆணவமலத்தின்) வலிமை. மேல் ``ஆணவம் விட்டு நின்றார்`` என்றதனால் `விஞ்ஞானகலர் ஆணவம் ஒன்றே உடையார்` என்பதும், `கலை, என்பது மாயையைக் குறிப்பதாகலின், `அகலராகிய பிரளயாகலர்க்கு அஃது இல்லை` என்பதும் போந்தன. ``பெத்தர்`` என்று ஒழியாது, `இருமல பெத்தர்` என்றது, அவரது இயல்பை விதந்தவாறு. ``நூற்றெட்டு`` என்னும் தொகைச் சொல் ஒரு சொல் தன்மைப்பட்டு நிற்க, ``இரண்டாகும்`` என்றது, அத்தொகை முழுவதையும் விசேடித்தது. `சகலராவார் இவர்` என்பதனையும் ஈற்றடியால் ஈண்டே கூறினார்.இதனால், `பிரளயாகலர் மூவர் இவர்` என்பது கூறப்பட்டது. பன்மை பற்றி இவரையே எடுத்தோதி, சுத்தவித்தையில் நிற்கும் உருத்திரன், மால், அயன், இந்திரன், சீகண்ட உருத்திரர், நந்தி, கணங்கள் என்பவரையும் உபலக்கணத்தால் தழுவிக்கொள்ள வைத்தார் என்க. `பிரளயாகலர் மூவரும் தவத்தால் விஞ்ஞான கலரோடொத்து அவரது நிலைகளில் நிற்றல் உண்டு` என்பதுமேலே குறிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage