
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 4. தக்கன் வேள்வி
பதிகங்கள்

நெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே
அளிந்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை
விளிந்தா னதுதக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யாளே.
English Meaning:
Well may the learned in lores waverBut waver not thou;
Melt in love for our Primal Lord
And you shall have Him sure;
He destroyed the unholy sacrifice of Daksha
And yet turning back
As they repented and prayed
He blessed them all,
He our Lord of holy speech.
Tamil Meaning:
சிவபெருமானை இகழ்ந்தமையால் அப்பொழுதே செத்தவனாகிய தக்கனது வேள்வியை அழியுமாறு வைதும், பின்னர் அழிந்த அனைவரையும் மீள எழுமாறு வாழ்த்தியும் அருளிச் செய்த வாய்மையை உடைய எங்கள் உமாதேவியே, யாவர் தங்கள் மனத் திட்பத்தை இழந்து நிலைகலங்கிப் பிறரைச் சார்ந்தபோதிலும், நீ நிலை கலங்காமலே நின்று அன்போடு அணைவது எங்கள் சிவபெரு மானையே யன்றோ!Special Remark:
படர்க்கையில் வைத்து வியக்கற்பாலளாய உமா தேவியை முன்னிலைப்படுத்து வியந்தார், அச்சுவை மிக்கு விளங்குதற் பொருட்டு, பின் இரண்டடிகளை முதலில் வைத்து உரைக்க. நெளிதல் - நெகிழ்தல். `தெளிந்தார்` என்பது பாடம் அன்று. `ஆர் நெளிந்து கலங்கினும்` என மாற்றுக. அளிந்து - அன்பு மிக்கு. `ஆதிப் பிரானையே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. ``விளிந்தான்`` என்றது துணிவு பற்றி எதிர்காலத்தை இறந்த கால மாகக் கூறியது. சுளிந்து - வெகுண்டு. `சுளிந்துகூறி` என ஒரு சொல் வரு விக்க. தக்கன் தனது வேள்வியைத் தொடங்கிய பொழுது, உமை அம்மை தன்னை அவன் அழையாதிருக்கவும் சென்று அவனுக்கு அறிவுரை கூறியும் கேளாமையால், அவனது வேள்வி அழியும்படி சபித்து மீண்டமையும், பின்னர் வீரபத்திரரால் யாவரும் அழிந்து கிடந் தமையைச் சிவபெருமானுடன் அங்கு அவள் எழுந்தருளியபொழுது கண்டு இரக்கம் உற்று அவர்களை உயிர்ப்பித்தருளுமாறு சிவபெரு மானை வேண்டினமையும் கந்தபுராணத்தால் அறிகின்றோம். அம்மையை வியக்கும் முகத்தால் தேவரது இழிபுணர்த்தியவாறு.இதனால், உமாதேவி தனது செயலால் ஏனையோர்க்கு உண்மை யுணர்த்தினமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage