
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 4. தக்கன் வேள்வி
பதிகங்கள்

அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக்
குலந்தருங் கீழங்கி கோளுற நோக்கிச்
சிவந்த பரமிது சென்று கதுவ
உவந்த பெருவழி யோடிவந் தானே.
English Meaning:
While the heavenly Beings sang of HimAs seated in rapture serene,
He came rushing
To me along the highway of bliss that opened
As from Muladhara the Kundalini fire upward shot
To the crimson spheres of Sahasrara
In the way that is yoga.
Tamil Meaning:
அக்கினிதேவன் கிளர்ந்தெழுந்தமைக்குத் தக்கன் முன்னிலையில் தேவர் பலரும் அவனைப் புகழத் தேவ கூட்டத்துள் கடைப்பட்டவனாகிய அக்கினிதேவன் முதற் குற்றவாளி யாயினமையை அறிந்து சிவபெருமான் கொண்ட சினமாகிய மேலான தீ அவ்வேள்விச் சாலையிற் சென்று பற்ற, அக்கினிதேவன் தனக்குப் பொருந்தியதொரு பெரிய கள்ள வழியினால் வேள்விச் சாலையை விட்டு வெளியே ஓடி வந்து விட்டான்.Special Remark:
வைதிகருள் கருமகாண்டிகள், தேவர் பலர்க்கும் அவரது அவியைச் சுமந்து சென்று கொடுத்தல்பற்றி அக்கினி தேவனை, `தேவர் பலர்க்கும் கீழ்ப்பட்டவன்` - விண்டு பரமன். அக்கினி அவமன்: அவ்விருவர்க்கும் இடையே எல்லாத் தேவரும் (சிவஞானபோத மாபாடியம் சூ.1 அதி.2) என்பர். அவர் கொள்கையே தக்கன் வேள்விக்குப் பொருந்தியது ஆதலின், ``குலந்தரும் கீழ் அங்கி`` என்றார். `குலத்தால் தரப்பட்ட கீழ்மையை உடைய அங்கி` என்க. கோள் - குற்றம். சிவந்த - கோபித்த. சிவத்தற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. சிவந்த இது - சினந்ததனால் வந்த இத் தீ. `அது` எனின், அக்கினி தேவனைச் சுட்டுமாகலின், `இது` என்றார். ``கீழ் அங்கி`` என்றதற்கு ஏற்ப, ``பரம் இது`` என்றார். கீழான தீ மேலான தீயின்முன் நிற்கலாற்றுமோ என்பது நயம். சிவபெருமானது சினத் தீயாவது, வீரபத்திரரே என்பது வெளிப்படை. ``தீ`` என்றதற்கு ஏற்ப, ``கதுவ`` என்றார்.இதனால், தக்கன் வேள்வியுள் ஓட்டமெடுத்தவருள் முதல்வன் அக்கினிதேவன் என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage