
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 24. கேள்வி கேட்டமைதல்
பதிகங்கள்

வைத்துணர்ந் தான்மனத் தோடும்வாய் பேசி
ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன் றொவ்வா
தச்சுழன் றாணி கலங்கினும் ஆதியை
நச்சுணர்ந் தாற்கே நணுகலு மாமே.
English Meaning:
Heart and tongue in unison met, the Lord cognise,Though in diverse shapes He be, Him in unity find;
Then, e`en though shaken in life like axle from pin,
Seek the Primal Lord in love and Him to yourself bind.
Tamil Meaning:
சிவபெருமானை மனம் ஒருங்கி உணர்ந்தவனே அப்பெருமானை மனத்தால் நினைத்தும், வாயால் வாழ்த்தியும் அவன் திருக்குறிப்போடு ஒத்து உணர்ந்தவன் ஆவான். அவனுக்கு உடற் கூறுகள் தம்மில் ஒவ்வாது நிற்ப, உடலாகிய தேரைத் தாங்குகின்ற உயிராகிய அச்சு உழன்று, அவ்வச்சிடத்து அத்தேரின் ஆழியை நிலைபெறுத்தும் ஊழாகிய கடையாணியும் கழன்றாலும் அவன் சிவபெருமானைத் தப்பாது அடைவான்.Special Remark:
``ஆதியை, மனம்`` என்பன முதலிலும் சென்று இயையும். ``வைத்துணர்ந்தான் .. ... ஒத்துணர்ந்தான்`` என்றதனால், வாளா நினைத்தலும், வாழ்த்தலும் செய்வார் அதனை உண்மையாற் செய்தவர் ஆகாமை பெறப்பட்டது. `கல்வி கேள்விகளானன்றி அறியாமை நீங்காமையின், அவை இல்லாது செய்வது அறிவின் வழிப்பட்டதாகாது, ஏரல் எழுத்துப் போல்வதொரு விழுக்காடாம்` என்பது கருத்து. இஃதே பற்றி,கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார். -குறள் 404
எனவும்,
``தெருளாதான் மெய்ப்பொருல் கண்டற்றால்`` -குறள் 249
எனவும் கூறினார் திருவள்ளுவர். இங்ஙனம் கூறவே, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் ஆயிற்று.
ஞானத்தால் தொழுவார் சிலஞானிகள்;
ஞானத்தால் தொழுவேன்உனை நானலேன்;
ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு,
ஞானத்தாய்உனை நானும் தொழுவனே. -தி.5 ப.91பா.3
என்றருளியதும் இப்பொருட்டு.
சிவபெருமானது திருக்குறிப்பு, உயிர்கள் தன்னை அறிவால் அடைதல் வேண்டும் என்பதேயாதலின், வைத்துணர்ந்தான் ஒத்துணர்ந்தானாவன். இவ்வொருமைச் சொற்கள் இனத்தின் மேல் நின்றன. இதனை `ஒருபால் வழக்கு` (தொல். பொருள், 218) என்பர் தொல்காப்பியர். உரு - உடம்பு; என்றது அதன் கூறுகளை. அவை வாத பித்த ஐ முதலியவை. ``ஒவ்வாது`` என்றதின்பின் `ஆக` என்பது வருவிக்க. `உழன்று` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது. `நச்சி` என்பதன் இகரம் தொகுத்தலாயிற்று. ஏகாரம் இரண்டனுள் முன்னது தேற்றம்; பின்னது ஈற்றசை. `உணர்ந்தார்க்கு` என்பது பாடம் அன்று. அறிவால் தன்னை அடைந்தாற்கு,
``புலன் ஐந்தும், பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட்டு ஐ மேல் உந்தி, உயிர் அலமரும் நிலை` வந்ததாயினும், அவரைச் சிவபெருமான், `அஞ்சேல்` என்று அருள்செய்வான் (தி.1 ப.130 பா.1) ஆகலின், ``நச்சி உணர்ந்தாற்கே நணுகலும் ஆம்`` என்றார்.
இதனால், சிவபெருமானைக் கல்வி கேள்விகளின் வழி அடைதலே சிறந்தது என்பது வலியுறுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage