
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 24. கேள்வி கேட்டமைதல்
பதிகங்கள்

ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தின்
நேசமு மாகும் நிகழொளி யாய்நின்று
வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே.
English Meaning:
The Lord who gave us Birth and Death,Of Him e`er talk, His name adore, prattle in praise;
Then the abiding Light of His dear presence,
Like fragrance in flower, comes to you in Grace.
Tamil Meaning:
சிவபெருமானது திருவருளின் பெருமையையும், இறப்புப் பிறப்புக்களது சிறுமையையும் ஒருவரோடு ஒருவர் உசாவி அறிந்து, அவனது திருவருளையே காதலித்துப் பிதற்றி மகிழ்ந்தால், அப்பெருமான்மேல் அன்பு, முறுகி வளரும். வளர்ந்தால், அப் பெருமான் அவ்வன்பில் விளங்குகின்ற பேரொளியாய் எதிர்ப்பட்டு நின்று, பின்னர் மலரில் நின்று கமழும் மணம்போல உள்ளே நிலைபெற்று, இன்பம் தருவான்.Special Remark:
`அருளையும்` என்னும் இரண்டனுருபு தொகுத்தல். இறப்புப் பிறப்பு, உம்மைத் தொகை. அருள் முதலிய மூன்றும் ஆகுபெயரால் அவற்றின் தன்மையை உணர்த்தின. ``எய்தி ஆகு`` எனப் பாடம் ஓதி, `ஆகு` என்பதனை ஏவல்வினையாக்கி உரைப் பாரும் உளர். `வாசமலர்` என்பது, பிறிதின் இயைபு நீக்கிய விசேடணம். `கந்தம் போல` என உவம உருபு விரிக்க.``சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது`` -தி.10 5ஆம் தந்திரம்
எனவும்,
``உற்ற ஆக்கையின் உறுபொருள், நறுமலர்
எழுதரு நாற்றம்போல்
பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள்``
-தி.8 அதிசயப் பத்து, 9
எனவும் ஓதுதல் காண்க.
இதனால், சிவநெறிக் கேள்வி பயன்தரும் முறைமை கூறப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage