
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 22. சிவ தரிசனம்
பதிகங்கள்

ஓதின் மயிர்க்கால் தொறும்அமு தூறிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்
ஆதி சொரூபங்கள் மூன்றகன் றப்பாலை
வேதம தோதும் சொரூபிதன் மேன்மையே.
English Meaning:
Supreme Svarupa BlissBeyond Difference and Non-Difference
Is that inviolate Bliss;
In every hair root its ambrosial sweetness floods;
Beyond the initial Manifestness Three it is;
There indeed is the greatness vast of that Supreme Manifestness
That Vedas praise so high.
Tamil Meaning:
ஐந்தொழில் செய்யக் கருதிய காலத்துக் கொள்ளப்படுகின்ற `உருவம், அருவுருவம், அருவம் என்னும் மூவகை வடிவங்களும் இன்றி, அவற்றைக் கடந்துள்ள, உண்மை நூல்களால் கூறப்படுகின்ற சொரூப சிவனது மேலான இயல்பாவது, அவனைத் தன்னின் வேறாக வாயினும், ஒன்றாகவாயினும் உணரும்பொழுது அவ்வாறு உணரும் உயிரினது மயிர்கால்தோறும் தவறாது ஊறித்ததும்பகின்ற அமுதம்போலும் பேரின்பமேயாம்.Special Remark:
ஆதி - குறிப்பிட்ட ஒருகாலம். அக்காலத்தில் வடிவம், பெயர். தொழில் இவைகளைக் கொண்டு நிற்கின்ற சிவன். `தடத்த சிவன்` எனப்படுவான். அவைகளுள் ஒன்றும் இன்றித் தன்னியல்பில் நிற்கின்ற சிவன் `சொரூப சிவன்` எனப்படுவான். அவன் அநாதி. மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, உரைக்க. ``சொரூபங்கள்`` என்றது வடிவங்களை. மூன்றும் என்னும் முற்றும்மை தொக்கது. ஓதுதல், இங்கு உணர்தலாகிய தன் காரியம் உணர்த்தி நின்றது. `ஓதும்` என்பது பாடம் அன்று. அமுது ஊறிய - `அமுதம்போல ஊறிய` என உவமத் தொகை. பேதம், வேறாக உணர்தல். அபேதம், ஒன்றாக உணர்தல், முன்னது முதல்நிலை. பின்னது முடிநிலை. இவற்றின் பின், `இரண்டிலும்` என்னும் தொகைச் சொல் வருவிக்க இரண்டிலும் உளதாகும் ஆனந்தம் முறையே காதலன் காதலியைக் களவுக் காலத்து இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் இடந்தலைப்பாடு முதலிய காலங்களிலும், கற்புக் காலத்துப் பிரிந்து மீண்ட பின்னும் காணும் பொழுதும், கூடிய பொழுதும் உளவாகும் இன்பங்களை ஒக்கும். அவற்றிடையே வேற்றுமை உளதாயினும் இன்பம் ஆதலில் வேற்றுமையின்மை பற்றி, ``பிறழாத ஆனந்தம்`` என்றார். `சிந்தையுள்ளே நிற்கும் சிவனை ஞானிகள் சுகோதயனாகவும், சுக வாரியாகவும் உணர்ந்து இன்புறுவர்` என்பதாம்.இதனால், சிந்தையில் உள்ள சிவனது இன்ப நிலையை உணர்தல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage