
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 34. மோட்ச நிந்தை
பதிகங்கள்

மயக்குற நோக்கினும் மாதவம் செய்வார்
தமக்குறப் பேசின தாரணை கொள்ளார்
சினக்குறப் பேசின தீவனை யாளர்
தமக்குற வல்வினை தாங்கிநின் றாரே.
English Meaning:
Men of Evil Fate do not Practise DevotionEven if men of Tapas great,
With gracious looks entreat
The men of Evil Fate
Do not holy Dharana practise
They indulge in angry speech always;
All, all, their intractable Karma,
Themselves have they to undergo.
Tamil Meaning:
சமயப் பூசலை மேற்கொண்டு, பிற சமயத்தவர் சினங்கொள்ளுமாறு கடுஞ்சொற்களைப் பேசின பாவத்தை யடைந்தவர் தாம் `நெறியல்லா நெறி தன்னை நெறியாக மயங்கும் மயக்கம்* தம்மிடத்தில் பொருந்துதலால் நெறிகளைத் திரிய நோக்கினாராயினும், `நாம் பெரிய தவத்தைச் செய்கின்றோம்` என்பது தான் அவர்கள் கருத்து அவர்கள் தங்களுக்கு உண்மை மனோலயம் வரும்படி சொல்லிய முறையைக் கைக்கொள்ளாமையால் அக் கருத்துப் போலியேயாய் உண்மையில் அவர்கள் தம்மை வந்து சார வேண்டிய வினைகள் வந்து சார்தலினாலே அவற்றைச் சுமந்து நிற்பவரேயாவர்.Special Remark:
`தவத்தினால் வினையை நீக்கிக்கொள்பவர் அல்லர்` என்பாம். ``மாதவம் செய்வார்`` என்றது அவர்களது கருத்தை நோக்கி. தரணை - எண் வகையோக உறுப்புக்களில் மனம் ஒடுங்கி நிற்கும் நிலை. அஃது அதற்குரிய முறையைக் குறித்தது. `சினக்க` என்னும் வினையெச்சம், குகரச் சாரியையும், `உரு` என்னும் துணை வினையும் பெற்று, `சினக்குற` என வந்தது. ``பேசின`` என்னும் காரணப் பொருளில் வந்த பெயரெச்சத்தை, ``தீவினை`` என்பதனோடே முடிக்க. ``அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்``* என்பவாகலின் உறுதி கூறுமிடத்தும் இன்சொல்லால் கூறுதலே நன்றாகலின் `சமயத்துறையில் தாம் பிறர்க்கு உறுதி கூறுவதாகக் கருதிக்கொண்டு, அவர்பால் கடுஞ்சொற்களை வழங்குதல் தீவினையாம்` என்றபடி. இத்தீவினையை நன்னெறி யாளர் ஒரோ ஒருகாற் செய்யினும் அவர் பிறர்க்கு உறுதி கூறிய நன்மையையேனும் பெறுவர். நெறியாளர் நெறியாளர் இதனைச் செய்யின் அவர்க்கு மிஞ்சுவத் கடுஞ்சொல் வழங்கினமையால் வரும் அத் தீவினைமட்டுமே என்பது கருத்து. இம்மந்திரம் மூன்றாம் எழுத்தெதுகை பெற்றது.இதனால், சித்தாந்த முத்தியைப் பழிப்பார்க்குத் தீவினையும் உளதாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage