
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 34. மோட்ச நிந்தை
பதிகங்கள்

பரகதி உண்டென்ன இல்லை என் போர்கள்
நரகதி செல்வது ஞாலம் அறியும்
இரகதி செய்திடு வார்கடை தோறும்
துரகதி உண்ணத் தொடங்குவர் தாமே.
English Meaning:
Deny Not GodThose who say,
``There is no Para State to be``
Are for hell state destined;
All world knows this;
They shall begging go from door to door;
With horse`s speed,
In search of food they run.
Tamil Meaning:
`பிறப்பிறப்பினின்றும் நீங்கிப் பரம்பொருளை அடைந்து இன்புற்றிருக்கும் நிலை உண்டு` என்று உண்மை நூல்களெல்லாம் கூறாநிற்கவும், `அஃது இல்லை` எனப்பிணங்கி, மனஞ் சென்றவாறே செல்பவர்கள் நரகலோகத்தை அடைதல் உலகத்தில் உயர்ந்தோர் பலரும் நன்கறிந்தது நரகத்தின் நீங்கிப்பின்னும் அவர் மக்களாய்ப் பிறப்பின் கடைதொறும் சென்று இரக்கும் செயலையே உடையராவர். அங்ஙனம் இரக்குங்கால் வயிறு நிரம்பாமல் உணவு வேளை முடிவதற்குள் பலரிடம் சென்று இரக்க வேண்டி ஓடவும் தொடங்குவர்.Special Remark:
`நரக, துரக` என்பன கடைக் குறைந்து நின்றன. ``இர கதி`` என்பது வினைத்தொகை. இதன்கண் `கதி` என்பது நடை; தொழில். `கடை தோறும் இரகதி செய்திடுவார்; நிரம்ப உண்ணத் துரக கதி தொடங்குவர் என்க. தாம், ஏ - அசை. ``ஞாலம்`` என்றது ஆகமப் பிரமாணத்தையுடைய உயர்ந்தோரை.`பரகதி உண்டு` என்பவரே நோற்றலை மேற்கொள்வர். `அஃது இல்லை` என்பார் நோற்றலைச் செய்யார். நோலாதவர் வறியராய்ப் பிறப்பர்` என்பது உண்மை நூல்களின் முடிவாதல்,
``இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்; பலர் நோலா தவர்``.9
``மேலைத் - தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம்``3 என்பன முதலியவற்றால் விளங்கும். வறுமையால் இரத்தல் உண்டாகும். இரந்த வழியும் மிக்க தீவினையால், உணவு கிடைத்தல் அரிதாகும்.
சித்தாந்த முத்தியை மறுத்து வேறு கூறி, அக் கூற்றிற்கு ஏற்ப ஒழுகுவார்க்கு இவ்வாறான தீங்குகள் உளவாகா ஆயினும், `அவர்க்குப் பிறவி நீங்காது` என்க.
``உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்``9
என்னும் குறட்பாவும் இம்மந்திரத்திற் கூறிய பொருள் நோக்கம் உடைத்தென்க.
இதனால், `முத்தி` என்பதொன்று இல்லை என்பார், தம்மாலே தாம் கெடுதல் கூறப்பட்டது.
இதன்பின் பதிப்புக்களில் காணப்படும். ``கூடகில்லார் குரு வைத்த நெறிகண்டு`` என்னும் மந்திரம் முன்தந்திரத்தில் கேடுகண்டிரங்கல்` அதிகாரத்தில் வந்தது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage