
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 20. முப்பரம்
பதிகங்கள்

பற்றறப் பற்றில் பரம்பதி யாவது
பற்றறப் பற்றில் பரன்அறி வேபரம்
பற்றறப் பற்றினைப் பற்றவல் லோர்கட்கே
பற்றறப் பற்றில் பரம்பரம் ஆகுமே.
English Meaning:
Seek Lord in Intense Divine Desire and Become SivaShedding desires (worldly)
In intense (Divine) desire seek Him;
Yours shall be the Heavenly Kingdom of God (Param);
When you in intense (Divine) desire seek Him,
Shorn of desires (worldly),
Then shall the Knowledge of God be;
Only those who in intense (Divine) desire seek Him,
Bereft of desires (worldly),
Will (Param Param) Siva become.
Tamil Meaning:
பரம்பொருள் உயிர்களைப் பாதுகாக்கும் பதியாகி நிற்றல், அவ்வுயிர்கள் வேறு பற்று எதுவும் இன்றி, அனைத்துப் பற்றுக்களையும் விடுத்து, அந்தப் பரம் பொருள் ஒன்றையே பற்றி நிற்கும் பொழுதுதான், (இப்பாதுகாவல், பிறவிக் கடலினின்றும் எடுத்துக் காக்கும் காவல்) பிற பற்றுக்களை யெல்லாம் விடுத்துப் பரம் பொருளையே பற்றுதல், குரு உபதேசத்தைச் சிந்தித்துத் தெளிதலால் உண்டாகும். அதனையே,``ஓர்த்துள்ளம் உள்ள துணரின், ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு``
-திருக்குறள் - 357.
எனத் திருவள்ளுவர் கூறினார்.
அங்ஙனம் வேறு பற்று அறப் பரம்பொருளையே பற்றும் பொழுது அந்தப் பரம்பொருளின் ஞானமே உயிரினது ஞானமாகிப் பின்பு, அதுவே பரம் பொருளும் ஆகிவிடும். பரம்பொருளாகிய பற்றப்படும் பொருளை இவ்வாறு பற்ற வல்லவர்கட்கு அப்பற்றுதலின் கண் பரம் பொருள் பரம்பொருளாகவே வெளிப்படும்.
Special Remark:
``பரம்பதியாவது`` என்பதை முதலிற்கூட்டுக. மூன்றாம் அடியில் ``பற்று`` என்பது, முதனிலைத் தொழிற்பெயராய், ஆகுபெயரால், பற்றப்படும் பொருளைக் குறித்தது. ஈற்றடியிலும் ``பற்று`` என்பது முதனிலைத் தொழிற்பெயராய், ஏழாம் வேற்றுமை ஏற்றது. பரம் பரம் ஆதல் - உண்மையாக வெளிப்பட்டு விளங்குதல்.இதனால், `தத்துவ பரத்தை அதன் உபதேசத்தின் வழியே சென்று அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage