
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 20. முப்பரம்
பதிகங்கள்

மன்று நிறைந்தது மாபரம் ஆயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்றை நினைந்தெழு தாய்என வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக் காகுமே.
English Meaning:
Lord Appears in love in Para TuriyaThe Expanse vast of Para
As divine dance arena extended
Nandi there appeared
And stood filled;
When He came in tender love
As cow that yearns for calf,
Beaming was Jiva,
As lamp upon hill-top placed.
Tamil Meaning:
மண்டல பரம் துவாதசாந்தத்தில் நிற்றலால் ஏனைய கடவுளர்க்கெல்லாம் மேலான கடவுளாயும், அங்கே திருநடனம் புரிவதால் மன்றில் நிறைந்ததாயும், தனது சத்தியால் உடம்பெங்கும் நிறைந்து விளங்குவதாயும், இன்னும் நேரே எழுந்தருளிவந்து அருள் புரியும் குருவடிவாயும் உள்ளது. அந்தப்பரம் உயிர்களைக் கன்றை நினைந்து ஓடிவரும் தாயைப் போல நினைந்து எதிர்வந்து அருள் புரிந்த பின்னர், குடத்துள் இருந்த விளக்குப்போல இருந்த அது, குன்றின் மேல் விளங்கும் விளக்குப் போல இனிது விளங்கி நிற்கும்.Special Remark:
``மாபரம் ஆயது`` என்பதை முதலிற் கொள்க. ஏனைய கடவுளாவார் மூலாதாரம் முதலிய ஆதாரங்களில் விளங்குபவர்கள். `நிராதாரம்` எனப்படுகின்ற ஏழாம் தானத்தில் விளங்கும் கீழாய் அடங் குவதே ``நந்தி`` என்றது `குரு` என்றவாறு ``நந்தியும்`` என்னும் உம்மை சிறப்பு. இதன் பின் `ஆம்` என்பது எஞ்சிநின்றது. `வருதல், ஆதல்` என்ப வற்றிற்கு `அது` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது. நன்மையை, `குணம்` என்றல் வழக்கு. நன்மை, இங்கு இனிது விளங்கி நிற்றல்.``கன்றை நினைந்தெழு தாய்என வந்த கணக்கது ஆகாதே``l
என்னும் திருவாசகத்தையும் காண்க.
இதனால், மண்டல பரத்தின் பெருமையும், அஃது உயிர்கட்கு அருள் புரியுமாறும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage