
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 32. ஐந்திந்திரியம் அடக்கும் அருமை
பதிகங்கள்

விதியின் பெருவலி வேலைசூழ் வையம்
துதியின் பெருவலி தொல்வான் உலகம்
மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை
நிதியின் பெருவலி நீர்வலி தானே.
English Meaning:
Strength of Wisdom Leads to Higher LifeOf their Karma`s strength is life here below,
Of their prayer`s strength is life in heaven above,
Of their wisdom`s strength is men`s higher life;
Verily, of their strength of Grace
Is their way of life.
Tamil Meaning:
உலகில் அறத்திற்கும் இன்பத்திற்கும் காரணமாய் உள்ள பொருளின் வலிமைக்குக் காரணம் மழையின் வலிமையே யாகும். அதுபோல, கடல் சூழ்ந்த நிலவுலகில் உள்ள அனைத் துயிர்களின் வாழ்க்கை வலி அயன் விதித்த விதியின் வலிமையும், அவ்வுயிர்களுள் மக்கள் உயிர்களின் வாழ்க்கை வலிமைக்குக் காரணம் அவர்களது ஆறாவது அறிவின் வலிமையும், சுவர்க்க லோகத்தவரது வாழ்க்கையின் வலிமைக்குக் காரணம் அவர்கள் இந்நிலவுலகில் செய்த பல தெய்வ வழிபாடுகளின் வலிமையும், சிவலோகத்தவரது வாழ்க்கையின் வலிமைக்குக் காரணம் அவர்கள் இந்நிலவுலகில் செய்த சிவவழிபாட்டின் வலிமையுமாகும்.Special Remark:
ஆகவே, `ஐந்திந்திரியங்களை அடக்கியொழுகி அதனால் சிவலோகத்தை அடைதற்கு வழி சிவ வழிபாடேயாம்` என்பது கருத்து. ஈற்றடி எடுத்துக்காட்டுவமை யாதலின் அதனை முதற்கண் கூட்டியுரைக்க. ``நீரின்று அமையாது உலகு எனின் அந்நீர் வான்இன்று அமையாதது`` (திருக்குறள், 20) பற்றி, ``நீர்`` என்பதற்கு `மழை` எனப் பொருள் உரைக்கப்பட்டது. ``விதியை மதியால் வெல்லலாம்`` என்பது உலக மொழியும் (பழமொழி) `ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவின்றித் தாழா துஞற்று பவர்`` என்பது ஆசிரிய மொழியும் (திருக்குறள், 620) ஆகையால் ``மானுடர் வாழ்க்கைக்குக் காரணம் மதியின் பெருவலி`` என்றார். ``வானுலகம்`` என்பதை `விண்ணுலகம்` எனவும், `மேலான உலகம்` எனவும் இரட்டுற மொழிந்து கொள்க. ஐந்திந்திரியங்களை அடக்கிப் பெறும் பயன் கூறுவார், அவற்றை அடக்காதோர் பெறும் பயனையும் உடன் கூறினார். அடக்கிக் பெறும் பயனது சிறப்பு விளங்குதற்கு. ``துதி`` என்றது உபலக்கணம். `நதியின் பெருவலி நார்வலி தானே` எனப் பாடம் ஓதி, `நாரம்` என்பது அம்முக் குறைந்து நின்றது எனினும் ஆம்.இதனால், முன் மந்திரத்தில் கூறிய பொருள் உவமை முதலியவற்றால் நன்கு வலியுறுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage