
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 32. ஐந்திந்திரியம் அடக்கும் அருமை
பதிகங்கள்

ஐவர் அமைச்சருள் தொண்ணூற் றறுவர்கள்
ஐவர்உம் மைந்தரும் ஆளக் கருதுவர்
ஐவரும் ஐந்து சினத்தோடே நின்றிடில்
ஐவர்க் கிறையிறுத் தாற்றகி லோமே.
English Meaning:
Senses are Like Ministers that Seek to Usurp the Body-KingdomFive are the ministers,
Ninety six (Tattvas) are they within,
The Five and their brood of sons within
Seek you to rule;
If the Five in their fiery passion stand,
Endless indeed is the tribute
That to the Five we are to pay.
Tamil Meaning:
அரசராகிய நம்மில் ஒவ்வொருவருக்கும் ஐவர் அமைச்சர் உள்ளிட்ட தொண்ணூற்றாறு பேர் வல்லுநர் பணியாளராய் உள்ளனர். அவர் நமக்கு அடங்கிப் பணி புரியாமல் ஒவ்வொருவரும் தனித்தனியே நம்மை ஆள விரும்புகின்றனர். எனினும் ஐவர் அமைச்சரே நம்மை ஆள்வதில் வெற்றி காண்கின்றனர். அந்த ஐவருக்குள்ளேயும் ஒற்றுமையில்லை. அதனால் அவரவரும் ஒவ்வொரு நோக்கத்தோடு நம்மை ஆள முயல்கின்றனர். அவர்கட்கு வரிசெலுத்தி நாம் எவ்வாறு நிறைவு செய்ய இயலும்!Special Remark:
`இயலாது; ஆகவே அவர் அனைவரையும் அடக்கிப் பணிய வைத்தலே தக்கது` என்பது குறிப்பெச்சம். ஐவர் அமைச்சராவார் ஐம்பொறிகள். தொண்ணூற்றறுவர் அப்பொறிகள் உள்ளிட்ட தத்துவ தாத்துவிகங்கள். `உள்ளிட்டு` என்பது, `உள்` எனக் குறைந்து நின்றது. நோக்கம் நிறைவேறாதபொழுது சினம் உண்டாகும். ஆகையால் நோக்கத்தை, `சினம்` என்றது காரிய ஆகுபெயர். இறை - வரி; என்றது, சுவை, மணம் முதலிய புலன்களாய் உள்ள பொருள்களை, `அவற்றைப் பலகால் நுகரினும் நிரம்பாது மீள மீள அவாவே உண்டாதலின் நுகராது அடக்குதலே தக்கது` என்பது கருத்து.அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை, விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு. -திருக்குறள், 343
என்றே திருவள்ளுவரும் அருளினார்.
மைந்து வலிமையாதலின், ``மைந்தர்`` என்றது, `வலியர்` என்றபடி, அதனால் அவற்றை அடக்குதல் அருமை குறிக்கப்பட்டது. ``ஐவர் உம் மைந்தர்`` என்பதில் உகரம் சுட்டெழுத்து.
இதனால், `ஐந்திந்திரியங்களை வருந்தியாயினும் அடக்குதல் வேண்டுமன்றி, அடக்காது அவற்றின் வழிச் செல்லுதல் தகாது, என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage