
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 32. ஐந்திந்திரியம் அடக்கும் அருமை
பதிகங்கள்

சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும்
சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள
வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும்
கொல்லநின் றோடும் குதிரையொத் தேனே.
English Meaning:
Without Sense Control Jiva is Like an Uncontrolled SteedI praise not daily
The Holy Light;
I speak not of Sakti
That is within there;
I conquer not the senses Five;
Like an uncontrolled steed headlong to its down
Verily, Verily am I.
Tamil Meaning:
``துஞ்சும் போதும் சுடர்விடும் சோதியாய், (தி.5 ப.93 பா.8) உள்ள இறைவனையும், அவனோடே நீக்கமின்றி யிருக்கின்ற இறைவி யையும் நாள்தோறும் ஒழிவின்றி மந்திரமொழியாலும், தோத்திரப் பாடல்களாலும் சொல்லக் கடவேனாகிய யான் அங்ஙனம் செய்ய மாட்டாதவனாய் நிற்கின்றேன். அதனால் அங்ஙனம் மாட்டா தாரிடத்து வளர்வனவாகிய ஐம்புல ஆசைகளையும், அதனை உடைத்தாகின்ற மனத்தையும் அடக்கும் வலியிலேனாகின்றேன் அதனால், தன்மேல் இருப்பவனைக் குழியில் வீழ்த்திக் கொல்லவே நினைத்து வேகமாகப் பாய்ந்து ஓடுகின்ற குதிரையை அடக்க மாட்டாது விழிப்பவன்போலத் திகைக்கின்றேன்.Special Remark:
இரண்டாவது அடியில் வந்த ``சொல்லகில்லேன்`` என்பது சொற்பொருட் பின்வருநிலையணி. `மங்கையையும்` என்னும் இரண்டன் உருபு தொகுத்தலாயிற்று. ``வெல்லகில்லேன்`` என்பதை மூன்றாம் அடியின் இறுதியிற் கூட்டுக. ``தன்னை`` என்றது மனத்தை. ஐம்புலன்களை வெல்லுதல் அவற்றின்மேல் அவாக்கொள்ளாதவாறு அடக்குதலும், மனத்தை அடக்குதலாவது அதனைப் புறத்துப்போக விடாது அகத்தே நிற்கச் செய்தலும் ஆகும். `இவ்விரண்டும் கை கூடுதற்கு உபாயம் இறைவனை இறைவியோடு தியானித்துத் துதித்தலே` என்றற்கு` `அவற்றை நான் செய்ய மாட்டாதவனாய் இருக்கின்றேன்` என்றார். மாட்டாமை பரிபாகம் இன்மையால் உளதாவது. `இத்தகையோரிடத்து ஐம்புல ஆசை வளர்தல் இயல்பே, என்றற்கு, ``அங்குள புலன் ஐந்து`` என்றார். `குதிரையோடு` என ஒடு உருபு விரிக்க. ``ஒத்தேன்`` என்றது, அதனை மாற்றிச் செலுத்த வகையறியாது, `அதன் வழியிலே நிற்கின்றேன்` என்றதாம்.இதனால், `ஐம்புலனை அடக்கும் உபாயம் இது` என்பது அனுவாத முகத்தாற்கூறி, `பரிபாகம் இல்லார்க்கு அவ்வுபாயத்தைச் செய்தல் அரிது` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage