
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 5.தவம்
பதிகங்கள்

ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.
English Meaning:
Blessings of the Placid MindThe heart of the holy trembles not in fear,
All passions stilled, it enjoys calm unruffled;
Neither is there death
Nor pain, nor night nor day,
Nor fruits of Karma to experience;
That truly is the state of the desire-renounced.
Tamil Meaning:
உலகப் பொருள்கள் மேற்பரந்து செல்லுதலை யொழிந்து இறைவனது திருவடிக்கீழே சென்று ஒடுங்கி நிலைப்பெற்ற உயர்ந்தோரதுஉள்ளங்கள் யாதொன்றற்கும் அஞ்சுதல் இல்லை ; அவர்கள்பால் கூற்றுவன் செல்லுதலும் இல்லை; எல்லாப் பற்றுக்களை யும் முற்றும் விடுத்த அவர்கட்கு வரக்கடவொரு துன்பமும் இல்லை; இரவு பகல் முதலிய கால வேறுபாடுகள் இல்லை; உலகத்தில் விளைவ தொரு பயனும் இல்லை.Special Remark:
`உலகப் பற்றினின்றும் மீட்ட உள்ளத்தைப் பின் இறைவன் திருவடிக்கீழே ஒடுங்கி நிலைநிற்கச் செய்யும் முயற்சியே தவம்` என்பதனை, ``பற்றுவிட்டார்க்கு`` எனவும், ``ஒடுங்கி நிலை பெற்றஉள்ளம்`` எனவும் உடம்பொடு புணர்த்து, உணர்த்தினார். இதனானே மேலையதிகாரத்தோடு இதற்கு உளதாய இயைபு இனிது விளங்கும். உள்ளத்தைப் பற்றுக்களினின்றும் மீட்டு இறைவன் திருவடிக்கீழே ஒடுங்கி நிற்கச்செய்யும் முயற்சி, தோன்றி நிகழும் காலத்தே `தவம்` எனவும், இனிது முற்றிய காலத்தே `ஞானம்` எனவும் நிற்கும். தவநிலையையே சிவநூல்கள், `சரியை, கிரியை, யோகம்` என மூன்றாகவும், `சிவ தன்மம், சிவ யோகம்` என ஓராற்றல் இரண்டாக வும் பகுத்துக்கூறுதல் வெளிப்படை. அவற்றின் இயல்பையெல்லாம் நாயனார் முன்னைத்தந்திரத்தில் இனிது விளங்க அருளிச் செய்தார். இங்கு அவை சிவகுருவைத் தலைப்பட வேண்டினார்க்கு இன்றி யமையாச் சிறப்பின் ஆதலையே குறிக்கின்றார்.``நடுங்குவது`` என்பது தொழிற்பெயராய் நின்றது. ``இராப் பகல்`` என்றது உபலக்கணம். `நடுக்கமும், நமனும் இல்லாமை ஒடுங்கி நிலைபெற்றமையால்` என்பதும், `இடும்பை முதலியன இல்லாமை பற்று விட்டமையால்` என்பதும் குறிப்பால் தோன்ற வைத்தவாறு உணர்க.
இவற்றை, ``சுண்ணவெண் சந்தனச் சாந்தும் ... ...
... ... உடையார் ஒருவர் தமர்நாம்;
அஞ்சுவ தியாதொன்று மில்லை;
அஞ்ச வருவதும் இல்லை`` 3
``வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென்
மால்வரையும்
தானந் துளங்கித் தலைதடு மாறிலென்
தண்கடலும்
மீனம் படிலென் இருசுடர் வீழிலென்
வேலைநஞ்சுண்
டூனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட
உத்தமர்க்கே`` l
``நாமர்க்குங் குடியல்லோம்; நமனை யஞ்சோம்``8 என்றாற் போலும் அனுபவமொழிகளான் அறிக. இம்மந்திரத்தின் ஈற்றடி.
`படும்பழி பாவம் பயமில்லை தானே` எனவும், `கடும்பசி யில்லை கற்றுணர்ந்தார்க்கே` எனவும் பாடம் வேறு வேறாகவும் ஓதப் படுகின்றது.
இதனால், `தவமாவது இது` என்பதும் அதன் பயனும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage