
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 11. சற்புத்திர மார்க்கம்
பதிகங்கள்

பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட் டன்னமும் நீர்சுத்தி செய்தல்மற்
றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.
English Meaning:
What Constitutes Kriya PathTo perform Pujas, to read the scriptures holy
To praise the Lord, to chant His holy name,
To practise Tapas, to be truthful,
To bear no envy.
Thyself to cook the offering for Lord with loving care
These and other acts of reverence;
Constitute Pure Path of Filial Piety.
Tamil Meaning:
அருக்கிய. பாத்திய. ஆசமனாதி முகமன்களைச் செய்தலும், தோத்திரம் சொல்லலும், திருமேனியைக் கண்ணை இமை காத்தல்போலப் பேணிக் காத்தலும், வழிபாட்டு முடிவில் மந்திரத்தைப் பலமுறை கணித்தலும், பசி தாகம் முதலியவற்றைப் பொறுத்துக் கொண்டு, செயல்களை விரையாது அமைந்து செய்தலும், உண்மையே பேசலும், காம வெகுளிகளாகிய மனக் குற்றங்கள் இல்லா திருத்தலும், அன்போடு படைக்கப்படுகின்ற அன்னம், பெரிதும் உதவு கின்ற நீர் என்பவற்றையும் செயலாலும், பாவனையாலும் மிகத் தூயன ஆக்குதலும், மற்றும் இன்னோரன்ன செயல்கள் பலவும் அன்போடும், ஆர்வத்தோடும் செய்யப்படுதலால், கிரியை குற்றம் அற்ற சற்புத்திர மார்க்கம் ஆகின்றது.Special Remark:
``உற்றநோய் நோன்றல்`` (திருக்குறள் - 291) முதலிய வற்றை வாளா செய்யாது வழிபாடு பற்றிச் செய்தலை, ``நற்றவம்`` என்றார். `இட்ட` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `இடுதல்` என்பது `படைத்தல்` என்னும் பொருட்டாய் ``அன்னம்`` என்பத னோடும், `உதவுதல்` என்னும் பொருட்டாய் ``நீர்`` என்பதனோடும் இயைந்தது. சிறப்புடைய இவ் இரண்டற்கும் நேசித்தல் கூறவே, பிறவற்றிற்கும் அஃது உண்மை தானே பெறப்பட்டது. ``அன்னமும்`` என்னும் சிறப்பும்மை ``நீர்`` என்பதனோடும் இயையும். அதனால், பிறவும் சுத்தி செய்யப் படுதல் தானே அமைந்தது. சுத்திகளை ஐந்தாகக் கிரியாபாதம் கூறும். அவை: `பூத சுத்தி, தான சுத்தி, திரவிய சுத்தி, மந்திர சுத்தி, இலிங்க சுத்தி` என்பன. இவற்றின் இயல்பெல்லாம் கிரியை பற்றிய நூல்களிற் கண்டு கொள்க.இதனால், இவையெல்லாம் அன்பின் வெளிப்பாடாக நிகழ்தலால், கிரியை சற்புத்திர மார்க்கமாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage