
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 7. தாரணை
பதிகங்கள்

நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்
இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் கோட்டை பொதியலு மாமே.
English Meaning:
If of the ten Vayus that fill the bodyFive by exhalation leave,
What avails you fool!
What though you wake and pray?
They who control breath in measure ordained,
Will sure imprison mind-monkey
Within the body-fortress.
Tamil Meaning:
ஒன்றும் அறியாத மாணவனே! உடம்பினுள் நிறைந்திருக்கின்ற பத்து வாயுக்களில் இயங்கும் வாயுக்கள் ஐந்து வீணாய்ப் போய்விட்டால், நீ விழித்திருந்தும் என் செய்ய மாட்டுவாய்! கழிந்ததற்கு இரங்கி நிற்பவனேயாவாய். ஆகையால், பிராணா யாமத்திற்குக் கூறிய முறையைக் கடைப்பிடித்துப் பிராண வாயு மேலேறுதற்கு வழியை உண்டாக்குபவர்கட்கு, மனமாகிய குரங்கை ஆதாரங்களாகிய கோட்டையை விட்டுப் புறத்தே குதித்து ஓடாதபடி நிற்கச் செய்தலும் கூடும்.Special Remark:
அஃதாவது, ``தாரணையைப் பெறுதலும் கூடும்`` என்பதாம். ``ஈரைந்து, ஐந்து`` என்பவை அதிகார இயைபால் வாயுக்களைக் குறித்து நின்றன. ``இரங்கி`` என்பது பெயர். இதன்பின் ``ஆவாய்``என்பது எஞ்சிநின்றது. ``குரங்கு, கோட்டை`` என்பது குறிப்புருவகங்கள்.உடம்பின்கண் உள்ள வாயு, ``இயங்குவதும், நிற்பதும்`` என இருவகைத்தாம். ``நிற்பது`` என்றல், இயங்குவதை நோக்கியாம். அவற்றுள் இயங்கும் வாயு மூக்கு வழியாக வெளிச் செல்லின் `பிராணன்` என்றும், வாய் வழியாக வெளிச்செல்லின் `உதானன்` என்றும், எரு வாய் வழியாக வெளிச் செல்லின், `அபானன்` என்றும், உடம்பெங்கும் பரவும்பொழுது `சமானன்` என்றும், உணவுப் பையுள் நின்று உணவைச் செரிப்பிக்கும் பொழுது `வியானன்` என்றும் இவ்வாறு ஐந்தாகி நிற்கும். இனி நிற்கும் வாயுவும், தும்மல் இருமல்களாக வலிதிற் புறப்பட்டு வேண்டாப் பொருளைப் புறத்திடும் பொழுது `நாகன்` என்றும், கண்ணைப் பல திசைகளிலும் நோக்குமாறு இயக்கும்பொழுது `கூர்மன்` என்றும், சோம்பல் காரணமாகப் பிராணவாயுவை இயல்பு திரிந்து கொட்டாவி முதலியனவாக ஆக்கும்பொழுது `கிரிகரன்` என்றும், கண் இமைத்தல் வாயசைத்தல் முதலியவற்றைச் செய்யும்பொழுது `தேவ தத்தன்` என்றும், குருதியில் உளதாகும் நோய் காரணமாக உடலை வேறுபடுத்தி நிற்கும்பொழுது `தனஞ்சயன்` என்றும் இவ்வாறு ஐந்தாகும். ஆகப், பத்து வாயுக்களில் முதலாவதாகிய பிராணனே ஏனை இயங்கும் காற்று நான்கிற்கும் ஆற்றல் தருவது; இயங்கும் காற்றுக்கள் ஆற்றல் கெட்டவிடத்து, நிற்கும் காற்றும் தம் தொழிலைச் செய்யமாட்டா. ஆகவே ``நிரம்பிய ஈரைந்தில் ஐந்து போனால் என் செய்வை`` என்றார். பிராண வாயு இங்கு அதிகாரப்பட்டமையால், அதன் வழியவாகிய அனைத்தையும், ``இவை`` எனச் சுட்டினார்.
`பிராணன், உதானன், அபானன், சமானன், வியானன்` என்பவற்றை முறையே, `உயிர்வளி, எழுவளி, விழு வளி, நிறை வளி, அறு வளி,` எனவும், `நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன்` என்பவற்றை முறையே, `தும்மு வளி, நோக்கு வளி, சோம்பு வளி, நுண் வளி, பரு வளி` எனவும் தமிழிற் கூறலாம்.
இதனால், யோகத்திற்குச் சிறந்ததாகிய பிராண வாயுவின் சிறப்புக் கூறுமுகத்தால், பிராணாயாமம் அதற்கு மேல் உள்ள யோகங்கட்கு இன்றியமையாமை கூறப்பட்டது.
(இதன் பின்னர், ``முன்னம் வந்தனர்`` என்னும் பாடல் இடைச் செருகலாய் உள்ளது.)முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம்
முன்னுறு கோடி உறுகதி பேசிடில்
என்ன மாயம் இடிகரை நிற்குமே.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage