
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 7. தாரணை
பதிகங்கள்

கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண் டூடே வெளியுறத் தான்நோக்கிக்
காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியது வாமே.
English Meaning:
Control the mind from getting diverted towards the sensesConcentrate on the Chidakasa within the spinal column,
The eyes must not see nor the ears hear,
This is the way to life eternal.
Tamil Meaning:
கோணுதல் (புலன்வழி ஓடுதல்) உடையதாய் இருந்த மனம், பிரத்தியாகாரத்தில் அதனை விடுத்து ஒருவழிப் பட, அதனை அவ்வழியில் முன்போல மீளாதவாறு குறிக் கொண்டு தடுத்து, சுழுமுனை வழியாக மேலே செல்கின்ற வாயுவே பற்றுக்கோடாக மேற்செலுத்தி, ஆஞ்ஞையை அடையு மாற்றால் அவ்விடத்திலே செய்யும் தியானத்தால் ஐம்பொறிகள் செயலற்றிருக்கும் நிலையை எய்தினவர்கட்கு, அந்நிலைதானே பிறவி வரும் வழியை அடைக்கின்ற உபாயமாகிவிடும்.Special Remark:
கீழ் - கீழ்மையான வாயில்; அவை ஐம்பொறிகள் கட்டுதல், இங்கு, ``தடுத்தல்`` என்னும் பொருளது. விலா எலும்பு, நாடிகள் முதலியவைகளைக் கட்டியுள்ளமையால், முதுகெலும்பைத் தந்திகள் முதலியவற்றை உடைய வீணைத் தண்டோடு உவமித்தல் நூல் வழக்கு. ``சிவபெருமான் திரிவிக்கிரமரது முதுகெலும்பை வீணை யாகக் கொண்டார்`` என்பது புராணம். ஆஞ்ஞை ஆகாயமாகச் சொல்லப்படுதலின், ``வெளி`` என்றார். நோக்கப்படும் பொருள் அவரவர்க்கு ஏற்ற பெற்றியான் அமைதலின், அதனைக் கூறாராயினர். ``கண், செவி`` என்பவை பிற பொறிகளையும் தழுவி நின்ற உப லக்கணம். `என்று`, என்னும் எண்ணிடைச் சொல்லின்பின் `இவற்றை உடையராய்` என்பது வருவிக்க. இனி, `காணா கண் கேளா செவி` என முற்றுத் தொடராகப் பாடம் ஓதுதலுமாம். ``வாணாள் வழி அடைக்கும் வழி`` என்பதனை, ``வாழ்நாள் வழியடைக்குங் கல்`` (குறள், 38) என்னும் திருக்குறளோடு ஒப்பிட்டு நோக்குக. `பிறவாமைக்கு வழியாதல், ஞானத்தின் வழியாக` என்க.இதனால், `தாரணையாவது இது` என்பதும், அதனது சிறப்பும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage