
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 7. தாரணை
பதிகங்கள்

கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப் போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலு மாமே.
English Meaning:
Bind the MuladharaRaise the Prana breath upward
Through the spinal hollow course it
And within in aptness retain,
And like a stork at stream a head Sit calm
In singleness of thought;
Well may you live forever and ever.
Tamil Meaning:
பூரக இரேசகம் செய்து கும்பிக்கப்பட்ட பிராணவாயு கீழ்ப்போகாதவாறு எருவாயை அடைத்து அதனால் போகாது நின்ற வாயுவை மூலாதாரம், சுவாதிட்டானம் முதலாக மேல் நோக்கிப் போகச்செய்து, ஆஞ்ஞைக்குக் கீழ் உள்ள இடை ஆதாரங்கள் ஒவ்வொன்றிலும் மனத்தை நன்றாகப் பொருந்த வைத்து, நீர் மடையில் கொக்கு, தான் வேண்டுகின்ற மீன் வரும் வரையில் அதனையே குறிக்கொன்டு நோக்கிச் செயலின்றியிருத்தல் போல, அங்குக் கருதப்படுகின்ற கடவுளரால் அவ்வாதாரயோகம் கைவருமளவும் அவரை வழிபட்டிருப்பவர்கட்கு, யோகநிலை முற்றும் கைவரும் காலம் வரையில் இறவாமலே இருத்தலும் கூடும்.Special Remark:
`மடை வாயிற்கொக்கு`, ``கொக்கொக்க கூம்பும் பருவத்து`` (குறள், 490) ``இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற்றிருந்தே வேசற்றேன்`` (தி.8 கோயில் மூத்த திருப்பதிகம், 5) மடைத்தலையில் - ஓடுமீனோட உறுமீன் வருமளவும் - வாடியிருக்குமாம் கொக்கு`` (மூதுரை, 16) எனப் பலவிடத்தும் கூறப்படுதல் காண்க.யோகம் கைவருதல், ஆதார யோகங்கள் ஆறும் பெற்று, அதற்குமேல் நிராதார யோகத்தை அடைந்து, அப்பால் மீதானத்தை உணர்ந்து நிற்றலாம். `அந்நிலை கைகூடுதற்கு நெடுங்காலம் செல்ல வேண்டியிருப்பினும், `அதுகாறும் உடல் அழியாது நிற்கும் நிலையும் தாரணையாலே உளதாகும்` என்பார், ``உடையாமல் ஊழி இருக்கலும் ஆமே`` என்றார். உம்மை, யோகம் கைவருதலைத் தழுவிநின்ற எச்ச உம்மை. முதல் மூன்று அடிகள் தாரணையைச் செய்யும்முறை கூறின. வந்தித்தலுக்குச் செயப்படுபொருளாகிய `கடவுளர்` என்பது சொல்லெச்சமாக வந்து இயைந்தது. `சிவயோகம் பயில்வார்க்கு இக் கடவுளர் சம்பு பட்சத்தவர்` எனவும், `பிறயோகம் பயில்வார்க்கு இவர் அணுபட்சத்தினர்` எனவும் உணர்க.
இதனால், தாரணை செய்யுமாறு கூறப்பட்டது. ஒரு கருத்துப் பற்றித் தாரணை வாழ்நாள் நீட்டிப்பிற்கு ஏதுவாதலும் உடன் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage