
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 13. அநுக்கிரகம்
பதிகங்கள்

ஆரும் அறியாத அண்டத் திருவுருப்
பார்முத லாகப் பயிலுங் கடத்திலே
நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே.
English Meaning:
He is the light withinHe is the body without
The precious object, beloved of immortals above,
The Holy Form, adored of saintly beings below,
He is the pupil of your eyes;
He the Object of all Knowledge.
Tamil Meaning:
ஒருவராலும் அறியப்படாத சிதாகாசத் திருமேனி யனாகிய சிவபெருமான், மண் முதலிய பூதக் கூட்டுறவாலாகிய மானுட உடம்பிலே நிற்கின்ற உயிரின்கண், நீரிற் கலந்த பால்போல வேறற நின்று, செவ்விபெற்ற உயிர்கட்கு அருள் புரிகின்ற செம்மையை அறியாமையால் மறந்தொழியாது, அறிவால் அறிந்துநின்று, அதனால் விளைகின்ற இன்பத்தையும் நான் பெற்றேன்.Special Remark:
`ஆரும் அறியா அகண்டத் திருவுரு` எனப்பாடம் ஓதுதலும் ஆம். கடம், சிறப்புருவகம். இதனால், ``நீர்`` என்றது உயிராதல் பெறப்பட்டது. இவ்வுயிர், மலம் நீங்கிய சுத்தான்ம சைதன்னியம் என்க. `இதனையே இறைவன் தானாக ஆவேசித்து நின்று பக்குவிகளுக்கு ஞானத்தை உணர்த்துவன்` என்பது,``இனி இவ்வான்மாக்கட்குத் தமது முதல்தானே குருவுமாய் உணர்த்தும் என்றது, அவன் அந்நியமின்றிச் சைதன்னிய சொரூபியாய் நிற்றலான்`` (சிவஞானபோத வார்த்திகம் - சூ. 8).
என்றதனானும், அதன் உரையானும் உணர்க. நேர்மை - செம்மை. திரோபவம் அவனுக்கு இயற்கையன்றாக அநுக்கிரகமே இயற்கையாதல்பற்றி ``நேர்மை`` என்றார். இனி `நேர்மை - நுட்பம்` எனினுமாம். இவ்வாறு சிவனே குருவாய் நிற்றலை அறிதலும், அறிந்தபின்னும் பயிற்சி வயத்தால் மறத்தலை ஒழிதலும் அரியவாதல் பற்றி ``சோராமல் காணும்`` என்றார். காணும் சுகம் - காண்பதனால் விளையும் இன்பம். அது அநுபவத்தாலன்றிக் காட்டப்படாமையின், `அறிந்தேன்` என்றார். இத்திருமந்திரப் பொருளையே மெய்கண்ட நூல்கள் பரக்க எடுத்து விரித்தல் அறிக.
இதனால், அநுக்கிரகத்தின்கண் படுவனவெல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage