
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 13. அநுக்கிரகம்
பதிகங்கள்

உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
தச்சு மவனே சமைக்கவல் லானே.
English Meaning:
Who seeks the luminous Nada atopAnd of its sweetness savour
Know of death—no more;
The Lord is the seed of all
Of Sun, Moon and Fire
Of the Universe Vast
The Architect that builds all as well.
Tamil Meaning:
தம் தலைக்குப் பன்னிரண்டங்குலத்திற்கு மேலாய் ஓங்கி, அறிவு வடிவாய் ஒலிக்கின்ற சிவபெருமானது திருவடிச் சிலம்பொலியையே விரும்பிக் கேட்டு அதனால், இன்பம் அடை பவர்கட்கு இறப்பு இல்லை. உலகமாகிய தேர்க்கு உறுப்புக்களாகிய நிலம் முதலிய பூதங்களும், முச்சுடர்களும் ஆகிய பொருள்களையும் படைத்து, அவற்றால் அத்தேரினைப் பண்ணி இயங்க விடுகின்ற தச்சராகிய வினைஞர்களைப் படைப்பவனும் அவனேயாகலின்.Special Remark:
`பிறப்பு இறப்புக்களைத் தந்து நிற்பவனாகிய தலைவனை அடைதலையன்றி, அவ்வல்லல் தீர்வதற்கு வழி வேறில்லை` என்றவாறு. இறப்பாவது, இப்பிறப்பிற்கு ஏதுவாக முகந்துகொண்ட வினை முடிவெய்த, மறு பிறப்பிற்கு ஏதுவாம் வினை வந்து நிற்றலின் இவ்வுடல் நீங்குதலாம். இந்த நீக்கத்தையே யமன் செய்வன். இறைவனது திருவருள் பெற்றார்க்கு அவர் பல பிறப்புக்களிலும் ஈட்டக் குவிந்து கிடக்கும் சஞ்சித வினை அவனது அருள்நோக்கத்தானே சுட்டெரிக்கப்படுதலின், அவர்க்கு மறுபிறப்பிற்கு ஏதுவாய் வரும் வினை இல்லையாம். ஆகவே, அவர்க்கு இவ்வுடம்பு நீங்கியபின் கிடைப்பது முத்தியேயாகும். இந்நீக்கத்தினை இவர்க்கு `நீலருத்திரர் செய்வார்` எனச் சிவாகமங்களும், `சிவகணத்தினர் செய்வர்` எனப் புராணங்களும் கூறும். ஆகவே, `இவர்கட்கு நமன் இல்லை` என்றார். எனவே, `சாவா நிலை` எனப்படுவது இதுவே என்பது இனிது விளங்கும். இஃது அறியாதார், `உடல் நீக்கம் யாவும் சாவே` என மயங்கி, `இறைவன் திருவருள் பெற்றாரும் சாவாதிருந்திலர்` என்று இகழ்தலும், `உடல் நீங்காது நிலைக்கப்பெறுதலே திருவருள் நிலை` எனக்கொண்டு அதனைப்பெறப் பெரிதும் விழைதலும், உழத்தலும் செய்வர். அவையெல்லாம் அருளாசிரியரது அருள்மொழிகளின் பொருளை உள்ளவாறு உணரும் ஆற்றல் இல்லாமையால் விளைவனவே என உணர்க. அருளாசிரியராயினார் ஒருவரும் உடலை நிலைக்கப்பண்ண எண்ணாமை அறிக. திருவருள் பெறாதார் எடுத்த உடலினின்று நீங்குதல், ஒருவர் குடியிருந்த வீட்டிற்கு உடையவர் அவரை அதினின்றும் போக்கப்போவது போல்வதும், திருவருள் பெற்றார் எடுத்த உடலின் நீங்குதல் பிறர் வீட்டில் குடியிருந்தவர் தமக்கென வீடு அமைந்தமையால் குடியிருந்த வீட்டை விடுத்துப்போதல் போல்வது மாம். ஆகவே, இருதிறத்தாரும் தாம் இருந்த வீட்டை விடுத்துச் செல்லுதல் காணப்படுமாயினும் அச்செலவு இரண்டினிடை உள்ள வேறுபாடு பெரிதாதல்போல, சாகின்றவரும், வீடுபெறுகின்றவரும் எடுத்த உடலின் நீங்குவாராயினும், அவ்விருவரது நீக்கத்திடை உள்ள வேறுபாடு பெரிது என்க.வித்து, `விச்சு` என மருவிற்று, ``விச்சதின்றியே விளைவு செய்குவாய்`` (தி.8 திருச்சதகம், 96) ``விச்சின் றிநாறுசெய்வானும்`` (தி.4 ப.4 பா.2) என்பவற்றிற் போல. `உலகப் பகுதிகள் எட்டு` என்னும் வகைபற்றி ஓதுகின்றாராதலானும், மேலைத் திருமந்திரத் தொடர்பானும், உலகிற்கு வித்துப் பூதங்களாகவே உரைக்கப்பட்டது. தச்சனை, ``தச்சு`` என்றது, `அரசு, அமைச்சு` என்பனபோல ஒற்றுமை வழக்கு. இது குறிப்புருவகமாக லின், `வித்து, உலகு` என்பவற்றிற்கு உரிய உருவகங்களும் விரித்து உரைக்கப்பட்டன.
இதனால், பிற தொழில்களைப் பிறர்பால் வைத்துச் செய் யினும், அருளல் தொழிலை அவனன்றிச் செய்வார் இல்லை என்பது கூறப்பட்டது.
`பட்டிப் பசுவைக் கால்சேரக் கட்டியவனே அதற்கு அப் பட்டித்தன்மை நீங்கியபின்னர் அவிழ்த்தல்போல, இறைவனும் ஆணவம் உடைய உயிர்களைக் கன்மம் மாயைகளுட் படுத்து, ஆணவம் நீங்கியபின்னர் அவற்றினின்றும் விடுப்பன்` என்றற்கு, ``கட்டி அவிழ்ப்பன்`` என்று முதற்கண் அருளிச்செய்தவர், அவிழ்க் கின்ற அவ்வருளின் சிறப்புத் தோன்றுதற் பொருட்டு அவன் கட்டுங் காலத்துக் கட்டியவாற்றை எல்லாம் விரிக்கின்றார். இதுமேல் போந்த விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத் தச்சும் அவனே சமைத்தலின் விரிவாதல் உணர்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage