
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 2. பதிவலியில் வீரட்டம் எட்டு
பதிகங்கள்

முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள்
அத்தி யுரிஅர னாவ தறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயி னுள்ளெழுந் தன்று கொலையே.
English Meaning:
They lit the Fires ThreeThe sacrificial blaze roared high;
And from inside it arose
An Elephant of Evil Power,
Whose hide the Lord peeled;
Why the Lord did it, they know not;
Seeking to rival the Lord`s might
The Heaven`s beings performed a homa unholy
And all those who from that fire arose
The Lord smote for the very fire to consume.
Tamil Meaning:
முனிவர் சிலர் செய்த வேள்வியுள் எழுந்த யானை உருவினனாகிய கயாசுரனால் தம் ஆற்றலையே பெரிதாகக் கருதி யிருந்த தேவர் பலரும் அன்று அங்குச் சென்று கொலையுண் டாரேயாகச் சிவபெருமான் ஒருவனே அவனை அழித்து அவனது தோலைப் போர்வையாகக் கொண்டான் என்பதைக் கேட்டும் அப்பெருமானது பெருமையைச் சிலர் அறியாது, ஏனைத் தேவருள் அவனையும் ஒருவனாக வைத்து எண்ணுகின்றனர்.Special Remark:
`அஃது அவர் வினையிருந்தவாறு` என்பது குறிப் பெச்சம். சிவபெருமான் செய்த இவ்வீரச் செயலைக் குறிக்கும் தலம் திருவழுவூர் வீரட்டம்.சிவபெருமான் யானையை உரித்த வரலாறு கந்த புராணத்துட் சொல்லப்பட்டது. அதில் அவன் பிறப்பு வரலாறு சொல்லப்பட வில்லை. ஆயினும், நாரத முனிவர் செய்த வேள்வியுள் ஆட்டுக் கிடாய் ஒன்று தோன்றித்தேவர் முதலிய பலரையும் துன்புறுத்தினமை கந்த புராணத்தால் அறியக் கிடப்பதுபோல, முனிவர் சிலர் செய்த வேள்வியுள் கயாசுரனாகிய யானை தோன்றித் தேவர்களைத் துன்புறுத் தினமை இத்திருமந்திரத்தால் அறியக் கிடக்கின்றது. சிவபெருமான் யானையை உரித்த பொழுது அவர் கொண்டிருந்த உருத்திரத் திருமேனியின் ஒளியையும், வீரச் செயலையும் காணமாட்டாது உமாதேவியை உள்ளிட்ட பலரும் நடுக்கங் கொள்ளச் சிவபெருமான் யானையை உரித்து அத்தோலைப் போர்வையாக அணிந்து அவர் களது அச்சத்தைப் போக்கினமை கந்த புராணத்துட் கூறப்பட்டது.
ஐம்பொறிகளை யானையாகக் கூறுதல் மரபாகலின், ஏனைத் தேவர் பலரும் மதங்கொண்ட யானைபோலும் அவ்வைம்பொறிச் சூழலில் அகப்பட்டுச் சுழலும் பசுக்களேயாக, அவற்றை வென்று நிற்கும் பதி சிவபெருமான் ஒருவனே என்பது இவ்வரலாற்றால் அறியத்தக்கது என்பதை நாயனார் உய்த்துணர வைத்திருத்தலை நுண்ணுணர்வால் நோக்கி உணர்க. இதுவும் சிவபெருமான் நேரே செய்த வீரச்செயலாம். இதனைக் காசியில் நிகழ்ந்ததாகவே கந்தபுராணம் கூறிற்று.
கொளுவுதற்கும், முழங்குதற்கும் ``முனிவர்`` என்னும் எழு வாய் வருவித்து, ``கொளுவி முழங்கு`` என இயைக்க. முழங்குதல் - மந்திரத்தை உரத்து உச்சரித்தல். வேள்வியுள் அத்தி - வேள்வியுள் எழுந்த யானை. ``உரி`` என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகு பெயராய், ``உரித்தவன்`` எனப் பொருள் தந்தது. தாம், அசைநிலை. ``பல தேவர்தாமும்`` என்பது மாறிநின்றது. உம்மை, முற்றும்மை. ``தீயின்`` என்றதும், `தீச் சாலையின்` என ஆகுபெயராயிற்று. `அத்தி யினுள்` என்பதே பாடமாயின், `தீ` என்பது குறுக்கல் பெற்றது என்க. எழுந்து - சென்று தங்கி. ``கொலையே`` என்றதன்பின் `உண்டார்` என்பது சொல்லெச்சமாய் நின்றது.
இதனால், சிவபெருமான் யானையை உரித்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage