
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 3. பிரணவ சமாதி
பதிகங்கள்

தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை
பாவித்த சூக்குமம் மேலைச் சொரூபப் பெண்
ஆலித்த முத்திரை ஆங்கதிற் காரணம்
மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே.
English Meaning:
Articulate Pranava is Siva`s Form; Inarticulate Pranava Sakti`s FormThe Sthula (articulate) Pranava (Aum)
Is the mighty key-word to Bliss of Manifestness (Svarupa)
The Sukshma (inarticulate) Pranava
Is Sakti`s Divine Manifestation (Svarupa)
The Mudra (Jnana) is the Cause of that Manifestation
The Pranava aloft is the Vedanta Highway.
Tamil Meaning:
வேதங்களில் உயர்த்துச் சொல்லப்படுகின்ற பிரணவ மந்திரம் மெய்ப்பொருள் இன்பத்தைப் பொதுவாக விளக்கும் தூல மந்திரமேயாம். (அஃது அகாரம் முதலிய ஐந்து அக்கரங்களாகவே சொல்லப்படுகின்றது. அக்கரங்கட்கும் அத்தியான்மிக சத்திகள் உண்டு. எனினும் அவை வேத வேதாந்தங்களில் சொல்லப் படவில்லை. ஆகவே அத்தியான்மிக சத்திகளையுடையனவாகச் சொல்லப்படுகின்ற சீபஞ்சாக்கரமே (திருவைந்தெழுத்தே) சூக்கும மூல மந்திரமாகும். (இது பிரணவத்தை நோக்கி, `சூக்குமம்` எனப்பட்டது) இனித் திருவைந்தெழுத்திலும் மிகச் சூக்குமமானது ஞான குரு தமது கையால் காட்டுகின்ற சின்முத்திரை. இவற்றுள் முதற்கண் சொல்லப்பட்ட பிரணவ யோகம் வேதாந்த முறையாம்.Special Remark:
எனவே, சீபஞாசாக்கர யோகமும், அதன் பொருளைச் சின் முத்திரையால் உணர்வதும் சித்தாந்த முறை` என்பது அருத்தா பத்தியால் பெறப்பட்டது. பஞ்சாக்கர யோகமாவது பஞ்சாக்கரத்தைச் சுத்தமானதாக அறிவாற் கணித்தலாம். சின்முத்திரையை உணர்தல் அனுபவமாம். ``பிரணவம்`` என்பதை முதலிற் கூட்டுக. சொரூபம் - மெய்ப்பொருள். `தூலப் பேருரை` என இயையும். மூல மந்திரம், ``பேருரை`` எனப்பட்டது. திருவைந்தெழுத்தைப் பிரணவத்தோடு கூட்டிச் சொல்லுதல் `ஆறெழுத்து மந்திரம்` எனப்படும். ஆறெழுத்தைச் சிகாரம் முதலாக வைத்து நோக்கி, பிரணவத்தை, `பரன்` என்றும், சிகாரம் முதலிய ஐந்தையும் முறையே `ஈசானம் முதலிய பஞ்சப் பிரமங்களின் சத்தி` என்றும் சிவாகமங்கள் கூறும். ஈசானம் முதலிய ஐந்தின் சத்திகள் முறையே `ஈசானி பூரணி, ஆர்த்தி வாமை, மூர்த்தி` எனப் பெயர் பெறும். இச்சத்திகள் ஐந்தும் முறையே ஐந்தும், நான்கும், எட்டும், பதின்மூன்றும், எட்டுமாகிய கலைகளை (கூறுகளை) உடையன. இந்த முப்பத்தெட்டுக் கலைகளின் வடிவமாகவே சதாசிவ மூர்த்தி எழுந்தருளியுள்ளார். இவையெல்லாம் சிவாகமங்களிலும், சைவ பத்ததிகளிலும் காணத்தக்கவை. இந்தப் பஞ்ச சத்திகளையே நாயனார் இங்கு, `மேலைச் சொரூபப் பெண்`` என்றார். எனவே, `அக்கரங்களாகச் சொல்லும் வேதாந்தத்திலும், சிவசத்திகளாகச் சொல்லும் சித்தாந்தம் நுட்பமானது` என்பதை, ``பாவித்த சூக்குமம்`` என்றார். பாவித்த - மறைபொருளாக வைத்துக் காக்கப்பட்ட. சின்முத்திரையில் பெருவிரல் `சிவ` என்பதையும், சுட்டு விரல் `ய` என்பதையும், நடுவிரல் `ம` என்பதையும் ஏனை ஆழிவிரல் சிறுவிரல்கள் கன்மம் மாயைகளாய் `ந` என்பதையும் குறிப்பனவாம். ஆலித்தல் - உருப்படுதல். விரைவில் கரைவதாகிய பனிக்கட்டி (கல்மழை) அவ்வாறு கரைவதற்குமுன் `ஆலி` எனப் பெயர்பெற்று நிற்கும். ``காரணம்`` என்றது, `அதி சூக்குமம்` என்றபடி.இதனால், ஞான குரு தரிசனத்தால் கிடைக்கும் பிரணவ யோகம், தூலம், சூக்குமம், அதிசூக்குமம் என மூன்றாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage