
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 31. போதன்
பதிகங்கள்

சீவன் எனச்சிவன் என்னவெவ் வேறில்லை
சீவ னார்சிவ னாரை யறிகிலர்
சீவ னார்சிவ னாரை அறிந்தபின்
சீவ னார்சிவ னாயிட் டிருப்பரே.
English Meaning:
Jiva and Siva are OneJiva and Siva
Separate are not;
Jiva knows not Siva;
When Jiva knows Siva;
Jiva becomes Siva.
Tamil Meaning:
`சீவன்` எனவும், `சிவன்` எனவும் வேறு வேறாய்த் தனித்து எக்காலத்தும் இல்லை, உடலும், உயிரும் போல என்றும் ஒன்றியே நிற்கும். அவ்வாறிருந்தும் சீவன் சிவனை அறிந்ததில்லை. ஏன்? பாசங்கள் சீவனது அறிவை மறைத்து நிற்கின்றன. (அம்மறைப்பு நீங்கிச்) சீவன் சிவனை அறியுமாயின் அது சீவனாய் இராது, சிவமாகவே இருக்கும்.Special Remark:
எனவே, `சார்ந்ததன் வண்ணம் ஆதல் உயிரினது இயல்பு` என்பது பெறப்படுகின்றது. அநாதி முதலே பாசத்தைச் சார்ந்து பாசமாய் நிற்கின்ற உயிர், சிவத்தைச் சாருமாயின் சிவமாயே நிற்பதாகும். அந்நிலையில் அது `போதன்` எனப்படும்.`ஆவர்` என்னாது ``ஆயிட்டிருப்பர்`` என்றதனால், `அதுவே உயிர் அடையும் முடிநிலைப்பயன்` என்பது விளங்கிற்று. `இத்தகைய பெருநிலைக்கு உரியதாகிய உயிர் அநாதியே இழிநிலையை எய்தியதும், பின்னரும் அந்நிலையை உணராது அதிலே இருத்தலும் வருந்தத் தக்கன` என அதன் இழிபு குறித்தற்கு இழித்தற் குறிப்பில் வரும் பன்மையால், ``சீவனார்`` என்றார். `அவருக்கு உண்மையிலே பெரியோனாகிய சிவனை அறிதல் எளிதன்று` என்றற்கு, ``சிவனார்`` என்றார். ``இல்லை`` என்பதன்பின் `ஆயினும்` என்பது வருவிக்க.
சீவன் சிவனை அறிதல் தனது அறிவினுள்ளேயாகும். அது `சிவன் நான்` எனப் பாவிக்கும் சிவோகம் பாவனையாம்.
``யாதொன்று பாவிக்க நான் அது ஆதலால்,
உன்னை `நான்` என்று பாவிக்கின்
அத்துவித மார்க்கம் உறலாம்``
என அருளிய தாயுமான அடிகள் வாக்கும், (``எங்கும் நிறைகின்ற சிவம்``)
``... ... ... ... நற்கமலை
ஊரிற் குறுகினேன்; ஓர்மாத் திரைஅளவென்
பேரிற் குறுகினேன் பின்``
என்னும் குமரருபர அடிகள் வாக்கும். (பண்டார மும்மணிக்கோவை, 24) இங்கு நினைவு கூரற்பாலன. இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணி கொண்டது.
இதனால், `பசு` எனப்படுகின்ற சீவன் `போதன்` ஆமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage