
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 16. பிட்சா விதி
பதிகங்கள்

விச்சுக் கலமுண்டு வேலிச்செய் ஒன்றுண்டு
உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது
அச்சங்கெட் டச்செய் அறுத்துண்ண மாட்டாதார்
இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே.
English Meaning:
Jnanis harvest the Body-fieldIn the body-field is the seed;
The field has a fence;
In the crown of the head
The crop ripened;
If without fear they harvest not,
And feed themselves not,
They are but those
Who beg for hunger`s sake.
Tamil Meaning:
அடியவர்கட்கு உலக உழவரின் வேறான விதைக் கூடை உண்டு; வேலி நிலம் உண்டு. அதனால் அவர் பசிக்குமுன்பே அவரது உழவுத்தொழில் அவர்கட்குப் பயனைத் தந்து விடுகின்றது. ஆகவே, `பசி வந்து வருத்துமோ` என்னும் அச்சம் இல்லாமல் அதற்கு முன்பே அவர்கள் அறுவடை செய்து பசியின்றி உண்கின்றார்கள். அது மாட்டாதவர்களே வயிறு வளர்க்கும் விருப்பத்தால் பலரிடம் சென்று இரந்து உயிர் வாழ்கின்றனர்.Special Remark:
ஆகவே, `அவர் அன்பர் விரும்பியளிக்கும் தானத்தை யேற்று உண்ணுதல் சோம்பலால் மானங்கெடாது வாழமாட்டாது மானம் இழந்து பிறரிடம் சென்று இரப்பவரது இரவன்று` என்பதாம்.உருவக வகையால் ``விதைக்கூடை`` என்பது சுழுமுனை நாடியையும், `வேலி நிலம்` என்பது சந்திர மண்டலத்தையும் அதில் உண்டாகும் விளைவு விந்துத்தானத்து அமிழ்தத்தையும் உணர்த்தின. விச்சுக் கலம் - விதைக் கூடை. ``உச்சிக்கு முன்னே`` என்பது சிலேடை வகையால் `பசிக்கும் முன்னே` என்றும், சந்திர மண்டலத்துக்கு முன்னே உள்ள விந்துத் தானமாகிய ஆஞ்ஞையையும் குறித்தன. ``மாட்டாதார்`` என்றதால் அடியவர் மாட்டுவராதல் விளங்கிற்று. `யோகத்தால் காயசித்தி பெற்று நெடுங்காலம் வாழ வல்லவர் அன்பர் செய்யும் வழிபாட்டினை ஏற்றலைச் சோம்பலால் வறுமை யுற்று இரப்பவர் செயலோடு ஒத்ததாக எண்ணுதல் அறியாமை` என்றபடி.
இதனால், `அடியவர் பிச்சை யேற்றல் இரத்தலன்று` என்பது காரணத்துடன் விளக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage