
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 11. ஞான வேடம்
பதிகங்கள்

சிவஞானி கட்கும் சிவயோகி கட்கும்
அவமான சாதனம் ஆகாது தேரில்
நவமாம் அவர்க்கது சாதனம் நன்கும்
உவமான மில்பொருள் உள்ளுற லாமே.
English Meaning:
They Need No PathsNeither for Siva Jnanis, nor for Siva Yogins
Is it meet superfluous ways to adopt;
In sooth, needless indeed are the sadhanas Four* for them,
When they can see the Peerless One
Within themselves full.
Tamil Meaning:
பயனில்லாத வேடம் சிவஞானிகட்கும், சிவ யோகிகட்கும், ஆகாது. ஆராயுமிடத்து அது வேதாகமங்களாகிய தொன்னெறியல்லாத புதுநெறியில் நிற்போர்க்கு ஆவதாம். அது நிற்க, சரியை முதலிய நான்கு நெறிகட்குரிய வேடங்களே ஒருதனிச் செம்பொருளாகிய சிவம் உள்நிற்கும் வேடங்களாம்.Special Remark:
ஆகவே, `அவையே சிவஞானிகட்கும், சிவயோ கட்கும் உரியன` என்பதாம். பயனில்லாத வேடங்கள் பாயுடுத்தல், தலைமுடியயைப் பறித்துக்கொள்ளல், மயிற்பீலி பிடித்தல், துவராடை அணிதல், வெற்றரையாய் இருத்தல் முதலியனவாம். இவை பரம் பொருள் வடிவாகாது, வாளா உடம்பை வருத்துதலாய் முடிதலின், பயனிலவாயின. இவை முதனூல்களாகிய வேதாகமங்களை இகழ்ந்து, புதியனவாய்ப் படைக்கப்பட்ட எதிர்நூல்களின் வழிநிற்பர் கொள்வன வாதல் வெளிப்படையாதலின், ``நவமாம் அவர்க்கு`` என்றார். வேடம் வகையானும், விரியானும் பலவாயினும், தொகையால் ஒன்றே யாகலின், ``ஆகாது`` எனவும், ``அது`` எனவும் ஒருமையாற் கூறினார். ``நான்கு`` என்றது ஆகமங்களின் வழி யவாதலின், `சரியை முதலிய நான்கு` என்பது விளங்கிற்று. சரியை முதலிய நான்கில் நிற்போர் தாம் தாம் செய்யும் பணிகட்கு ஏற்ற வேடங்களை யுடையராய் இருத்தல் பற்றி, அவைகளை வகுத்தோ தினார். இங்கு எடுத்துக் கொண்டது ஞானவேடமேயாயினும், சரியை முதலிய மூன்றும் ``அரும்பு, மலர், காய்`` l என்பனபோல ஞானத்தின் படிகிளைகளேயாதல் பற்றி, அவற்றது வேடங்களையும் உடன் ஓதினார். `சாதனமாவது இங்குவேடமே` என்பது அதிகாரத்தால் விளங்கும். உவமானம் இப்பொருள், இரண்டாவதில்லாத தனிப் பொருள். இதனை ``ஏகம்`` என்றல் உபநிடத வழக்கு ``ஒன்ற வன்றானே`` என நாயனாரும் தொடக்கத்தே உணர்த்திப் போந்தார்.இதனால், பிறவேடங்கள் கடுந்துறவை விளக்குவனபோல உலகரை மருட்டுவவாயினும், அவை சிவநெறியாளர்க்கு ஆகாமை கூறப்பட்டது. ஆகாதவற்றை. `ஆகா` எனக் கண்ணோட்டமின்றி அறுதி யாக விலக்கி ஒழித்தலும் உண்மை நூல்கட்கு இயல்பு என்பதை ஊன்றி யுணர்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage