
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 11. ஞான வேடம்
பதிகங்கள்

புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை
நன்ஞானத் தோர்வேடம் பூணார் அருள்நண்ணி
துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர்
பின்ஞானத் தோர் ஒன்றும் பேசகி லாரே.
English Meaning:
Perfect Jnanis speak notThey of lowly Jnana in vain assume robes;
Filled with Grace, they of true Jnana covet it not;
The bigots of faiths are of evil Jnana;
The perfect of Jnana speak not.
Tamil Meaning:
இழிந்த ஞானத்தை உடையவர்கள் உயர்ந்த ஞானத்தை உடையவரது வேடத்தைப் பூண்பாராயினும், அதனால் அவர்க்கு வருவதொரு நன்மை இல்லை. உயர்ந்த ஞானத்தை உடை யவர் இறைவனது அருளாகிய பயனைப் பெற்றுவிட்டமையால், `குறித்ததொரு வேடத்தைப் பூணவேண்டும்` என்னும் விருப்பமும் இலராவர். தமது ஞானத்தையே பெரிதாக மதிக்கும் குற்றத்தை உடையவர் ``தத்தம் மதங்களே அமைவதாக அரற்றிமலையும்`` 3 சமயப் பூசலை உடையராவர். மற்று, உண்மை ஞானம் உடையோர் அதற்குத் தகுதியில்லாதாரைக்காணின் ஒன்றும் பேசாது வாளாதே போவர்.Special Remark:
இழிவு, உலகியலுள் அழுந்தலும், உயர்வு அதனின் நீங்கி மேற்போதலுமாம். ``பூணார்`` என்பது `பூணுதலில் கருந் தூன்றார்`` என்றதாம். ``வேண்டுமாறு விருப்புறு வேடத்தர்`` l எனச் சேக்கிழாரும் கூறினார். ``சமயம்`` சமயவாதத்தைக் குறித்தலின் ஆகு பெயர். ``பின்`` என்பது, வினைமாற்றாய `மற்று` என்னும் பொருளில் வந்தது. ``ஒன்றும் பேசகில்லார்`` என்பது, `தமது நிலையைப் பிறர்க்கு வெளிப்படுத்திப் புகழ்பெற விரும்புதல் இலர்` என்பது உணர்த்தி, `அத்தகையோர் ஞானவேடத்தைப் புனைந்து கொள்ளுதலையும் ஒருதலையாக விரும்புதல் இல்லை` என்பதை வலியுறுத்தி நின்று. இதனுள் `` பூணார்`` என்பதை, `பூண்பர்` எனவும், முன்னை மந்திரத்தில், ``இன்றெனில்`` என்பதை `உண்டெனில்` எனவும் ஓதுவன திரிக்கப்பட்ட பாடங்களாதல் விளங்கும்.இதனால், உண்மை ஞானியர் சாத்தியமாகிய திருவருளை யன்றிச் சாதனமாகிய வேடத்தைப் பெரிதாகக் கொள்ளாமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage