
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 11. ஞான வேடம்
பதிகங்கள்

ஞான மிலார் வேடம் பூண்டும் நரகத்தார்
ஞானமுள் ளோர்வேடம் இன்றெனில் நன்முத்தர்
ஞான முளதாக வேண்டுவார் நக்கன்போல்
ஞான முளவேடம் நண்ணிநிற் பாரே.
English Meaning:
Jnana is All; not robesSans Jnana, robe but leads to hell
Sans robe, Jnana yet leads to Mukti;
When they seek Jnana,
They shall seek Lord and pray,
Their hearts robed in Jnana way.
Tamil Meaning:
ஞானம் இல்லாதவர் ஞானிகட்குரிய வேடத்தைப் பூண்டிருப்பினும் நரகத்திற்கு உரியவரேயாவர். ஞானம் உள்ளவர்கள் தம்மிடத்தில் ஞானிகட்குரிய வேடம் இல்லாதொழியினும் பரமுத்திக்கு உரியவரே. அதனால், ஞானம் உண்டான பின்னர் அதற்குரிய வேடத்தை விரும்புவோர் சிவபிரானைப் போலவே அந்த வேடத்தைப் பூண்டிருப்பர்.Special Remark:
`இன்றெனிலும்` என்னும் எச்ச உம்மை தொகுத்தல் பெற்றது. ``உளதாக`` என்னும் செயவெனெச்சம், ``கைப்பொருள் ஒன்றுண்டாகச் செய்வான் வினை``* என்பதிற் போல இறந்த காலத் தின்கண் வந்தது. இவ்வாறன்றி, எதிர் காலத்ததாகக் கொண்டுரைப் பின், அது முன்னை யதிகாரத்துத் தவ வேடமாயே முடிதல் அறிக. ``வேடம் நண்ணி நிற்பார்`` எனப் பின்னர்க் கூறுதலின், வேண்டுதல் வேடத்தையே ஆயிற்று. `ஞானிகட்குரிய வேடவாவது இது` என்பது உணர்த்துதற்கு ``நக்கன்போல்`` எனவும், `அவ்வேடம் காண்பார்க்கும் ஞானத்தை உண்டாக்கும்` என்றற்கு ``ஞானம் உள வேடம்`` எனவும் கூறினார். `நக்கன்பால்` என்பது பாடமன்று. நக்கன் - உடையில் லாதவன். ``அணியெல்லாம் ஆடையின்பின் என்பதை விடுத்தலின், `நகப்படுவன்` என்பது இதன் பொருளாம். சிவபிரானை இப் பெயராற் கூறுதல் பட்டும், துகிலும் உடாது, தோலையே ஆடையாக உடுத்தல் பற்றியாம். இனிக் `கீள், கோவணம்` என்னும் இவற்றளவே கொண்டு நிற்றலும் உடையின்மையாகவே கூறப்படும். இவ்வாறன்றி, `திகம்பரன்` என்பதே வெற்றரையாய் நிற்றலைக் குறிக்கும், எனவே, `நக்கன்` என்பதை `நக்நன்` என்னும் ஆரியச் சொல்லின் திரிபாகக் கொள்ளின் அது `திகம்பரன்` எனவே பொருள்படும். சிவபிரானை, `திகம்பரன்` என்றல் அவனது வியாபக நிலையைக் குறிக்குமல்லது வேடத்தைக் குறியாது. `சிவபிரான் பிச்சைக் கோலம் கொண்டு சென்ற பொழுது வெற்றரையாகச் சென்றனன்` என்பது உளதாயினும், கீள் கோவணத்தோடு சென்றனன் என்ற கருத்தும் உண்டு.``உறைவது காடுபோலும்; உரிதோல் உடுப்பர்;
விடைஊர்வது ஓடு கலனா`` l
என்றொடக்கத்தனவாய் வரும் திருமொழிகள் சிவபிரானது வேடங்கள் உலகரால் நகப்படுவனவாயிருத்தலையே உணர்த்தும். அவ்வாறிருப்பினும்,
``இறைஇவர் வாழும் வண்ணம் இதுவேலும்
... ... ... ... ... ,..
அறைகழல் வண்டுபாடும் அடிநீழல் ஆணை
கடவா தமர ருலகே`` 3
என்றற்றொடக்கத்தனவாய் வரும், திருமொழிகள் அவ்வேடங்கள் சிறிதும் பற்றுடபடாத தூய உணர்வைத் தெரிவிப்பனவாய்ப் பற்றுட் பட்டு மயங்கும் மயக்க உணர்வையுடைய தேவர் முதலிய பலரையும் ஆளும் தலைமைக் கோலங்களாய் இருத்தலை விளக்குமாகலின், அவை ஞானவேடங்களாதல் நன்கறியப்படும். அவ்வேடங்கள் காண்பார்க்கும் ஞானத்தைத் தோற்றுவித்தலை,
``ஓதிஓர்க் கப்படாப் பொருளை ஓர்விப்பன
... ... ... ... ... ...
ஆதிஅந் தம் இலா அடிகள் வேடங்களே`` 8
என்றற்றொடக்கத்தனவற்றால் அறிக. `நக்கன்பால்` என்பது பாடம் அன்று.
இதனால், `ஞானிகட்குரிய வேடத்தை ஞானம் இல்லாதார் புனைந்து வஞ்சிப்பின் நரகம் புகுவர்` என்பதும், `ஞானிகட்குரிய வேடம் இது; இதனை ஞானியர் விரும்பிற் பூண்பார்; பூணாது விடினும் அவர்க்குத் தாழ்வில்லை` என்பதும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage