
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 8. அவ வேடம்
பதிகங்கள்

இன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்துள
நன்செயல் புன்செய லால்அந்த நாட்டிற்காம்
என்ப இறைநாடி நாடோறும் நாட்டினில்
மன்பதை செப்பம் செயின்வையம் வாழுமே.
English Meaning:
Let Government lead people in the way of VirtueA land`s weal and woe are in its people
Out of good deeds and evil do they spring;
And so,
If the ruler unceasing leads the multitude in virtue`s way,
That land in prosperity waxes ever.
Tamil Meaning:
`ஒருநாட்டில் வாழும் மக்களிடத்துள்ள நற்செயல் தீச்செயல்களாற்றானே அந்த நாட்டிற்கு இன்பமும், துன்பமும் உளவாவன` என்று அறிந்தோர் கூறவர். ஆதலால், அரசனாவான் தனது நாட்டில் நிகழும் நற்செயல் தீச்செயல்களை நாள்தோறும் சோர்வின்றி ஆராய்ந்து தீச்செயல் செய்யாதவாறு மக்களைத் திருத்து வானாயின், அவனது நாடு துன்பமின்றி, இன்புற்று வாழும்.Special Remark:
`ஆதலால் அரசன் அதனை ஒருதலையாகக் செய்க` என்பது குறிப்பெச்சம். போலி வேடத்தாரை அகற்றுதல் சிறப்பாக அரசற்குக் கடமை என வலியுறுத்துவார். அரசு முறைமையைப் பொதுப்பட எடுத்தோதினார். முதல் தந்திரத்துள் இதனையே அரசு முறை பற்றிக் கூறுதற்கண் பல மந்திரங்களால் நாயனார் விரித் துரைத்தமை காண்க.`நாடு நன்றாவதும், தீதாவதும் அதன்கண் வாழும் மக்களது இயல்பானே` என்பதை,
``நாடா கொன்றோ, காடா கொன்றோ,
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே`` *
எனச் சங்கத்துச் சான்றோராய ஔவையாரும் கூறினார்.
இதனால், `போலி வேடம் தலைகாட்டாதபடி செய்தல் சிறப்பாக அரசற்குக் கடன்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage