
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 25. பெரியாரைத் துணைக்கோடல்
பதிகங்கள்

தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்
மாமனத் தங்கன்பு வைத்த திலையாகும்
நீயிடர்ப்பட்டிருந் தென்செய்வாய் நெஞ்சமே
போமிடத் தென்னொடும் போதுகண் டாயே.
English Meaning:
You may in distressUnto a tender leaf quiver,
What avails you if you are distressed,
My Heart!
Yet you love not Lord;
Do you go with me,
To where the Lord succours.
Tamil Meaning:
நெஞ்சே, நீ உன்னை அகப்படுத்துகின்ற துன்பத்தில் அகப்பட்டுத் தீயில் வீழ்ந்த தளிர்போல் வாட்டமுற்றாலும் சிவபெரு மானிடத்து அன்பு வைத்திலை. இவ்வாறு அத்துன்பத்திலே இருந்து நீ என்ன செய்யப் போகின்றாய்? நான் போகின்ற இடத்திற்கு நீயும் என்னோடு வா.Special Remark:
`தாவும்` என்னும் பெயரெச்சத்து உகரம் கெட்டது. தாவுதல் - அகப்படுத்தல். ``தளிர்போல்`` என்றாராயினும், தீயில் வீழ்ந்த தளிர்போல்`` என்றல் கருத்தாதல் அறிக. நெஞ்சை முன்னிலைப் படுத்தமையின், அதற்கும் ஒரு மனம் இருப்பது போலக் கூறினார். ``என் செய்வாய்`` என்றது, ``வேறு பயன் என்ன பெறப் போகிறாய்`` என்றவாறு. ``பெறுவது ஒன்று இன்மையால் என்னொடு வருதலால் இழப்பில்லை`` என்பதாம். ``சிறியார் பெரியாரை அணுக வாரார்`` என்பது தோன்றுதற்குப் ``பெரியோரிடத்து`` என்னாது, ``போமிடத்து`` எனப் பொதுப்படக் கூறினார். `போந்தால் அத்துன்பம் நீங்கும் `என்பது குறிப்பெச்சம். ``கண்டாய்`` முன்னிலை அசை. இத் திருமந்திரத்துள் மூன்றாம் அடி உயிர் எதுகை பெற்றது.இதனால், `பெரியாரைத் துணைக் கொள்வார்க்குத் துன்பம் நீங்கும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage