
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 25. பெரியாரைத் துணைக்கோடல்
பதிகங்கள்

ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
பாடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
தேடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
கூடவல் லாரடி கூடுவன் யானே.
English Meaning:
I walk with those who go after God,I live with those who sing His praise,
The Lord blesses those who seek Him,
With them I consort,
Their feet I seek.
Tamil Meaning:
சிவபிரானை அடைய விரும்பிய யான், பத்தி காரணமாக, அவன் வெளிப்படும் இடங்கட்கெல்லாம் ஓடியும், அவனையே புகழ்ந்து பாடியும் இன்னோரன்னவற்றால் அவனை அடையவல்லாரது அடிநிழலைப் பிரியாது சேர்ந்திருப்பேன்.Special Remark:
எனவே, ``அச் சேர்ச்சிதானே அவனை அடை விக்கும்`` என்பதாம். ``ஓடவல்லார், பாடவல்லார்`` என்றதும் கூட வல்லார் கூடுமாற்றை விதந்தவாறேயாம். ஆகவே, `நடாவுவன், வாழ்குவன்` என்பனவும். ``கூடுவன்`` என்றதனை வகுத்தோதியவாறாம். `ஓட வல்லாராகிய தமர்` என்க. `சிவனையடைய விரும்புவார்க்கு அவனடியவரே உறவினர்` என்பதை``உறவாவார் உருத்திரபல் கணத்தினோர்கள்``
-தி.6 ப.98 பா.4
என்பதனாலும் அறிக. `ஓலியொடு` என உருபு விரிக்க. ஒலியொடு வாழ்தலாவது தாமும் அவரொடு சேர்ந்து பாடுதல். பாடவல்லாரை. ``பரமனையே பாடுவார்``(தி.7 ப.39 பா.10) எனத் திருத்தொண்டத் தொகையுள் அருளிச் செய்தமை காண்க. `பாடவல்லாரொடு` என்றே பாடம் ஓதுதலும் ஆம். தேடுதல் - அடையுமாற்றாலெல்லாம் முயலுதலும். ``ஓட வல்லார்`` முதலிய நான்கும், பெரியாராவாரது இயல்பு இவை என்றவாறாம்.
பாடிற் றிலேன்;பணி யேன்; மணி நீயொளித்
தாய்க்குப்பச்சூன்
வீடிற் றிலேனை விடுதிகண் டாய்; வியந்
தாங்கலறித்
தேடிற் றிலேன், சிவன் எவ்விடத் தான் எவர்
கண்டனரென்
றோடிற் றிலேன்;கிடந்துள்ளுரு கேன்;நின்
றுழைத்தனனே. -தி.8 நீத்தல், 45
என்றதனையும் நோக்குக. இங்கு, கூடவல்லார் அடி கூடுவன் என்றாற் போலவே,
``கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே`` -தி.6 ப.96 பா.10
``... ... ... ... ஆதியை நாளும்
இறைவன் என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே`` -தி.7 ப.75 பா.1
என்றற்றொடக்கத்தனவாக வருவன பலவற்றுள்ளும் அடியார்க்கு அடியவராதலே சிறந்தெடுத்துப் பேசப்படுதல் அறிக. ``யான்`` என்றது இசையெச்சத்தால், ``சிவபிரானை அடைய விரும்பிய யான்`` எனப் பொருள் தருதல் காண்க.
இதனால், ``பெரியாரைத் துணைக்கோடலே இறைவனை அடைவிக்கும்`` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage