
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 20. அதோமுக தரிசனம்
பதிகங்கள்

எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவழ் மேனி அறுமுகன் போய்அவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.
English Meaning:
`Hail our Lord! Our God!Deathly is the might of Padmasura
Save us, help, oh!``
Thus did Celestials to Primal Lord pray!;
And the Primal Lord to the Six-faced God,
Of coral hue beckoned;
And said, ``Proceed and smite the enemy.
Tamil Meaning:
பிரகிருதி புவனத்தில் நிலவுலகத்தில் வாழ்ந்த சூரபதுமனாகிய அசுரனால் விளைந்த துன்பத்தை இயற்கை மணம் கமழும் மேனியராகிய தேவர்கள் விண்ணப்பித்து, `எம் பெருமானே, இறைவனே, முறையோ` என்று சொல்லி முறையிட, `அழகிய பவழம் போலும் மேனியை உடைய அறுமுகன் சென்று அவர்தம் பகைவனை அழிக்க` என்று திருவுளம் பற்றிய பெருமான் சாதாக்கிய தத்துவத்தில் சதாசிவனாய் நிற்கும் அவனே.Special Remark:
`ஆகவே, அவன் சுத்தமாயையில் உள்ளார்க்கு மட்டுமின்றி, ஏனை அசுத்தமாயை பிரகிருதி மாயைகளில் உள்ளார்க்கும் அருளி புரிபவனே; அதனால், எவ்விடத்து அவனை வழிபடினும் அவ்விடத்து அவன் ஏற்ற பெற்றியால் நின்று அருள் புரிவன்; எனவே, நிலவுலகத்துத் திருக்கோயில்களில் திருமேனிகளில் அவன் நின்று அருள் புரிதற்கு ஐயமில்லை` என்பது குறிப்பெச்சம்.``தாபர சங்கமங்கள் எனும்இரண் டுருவில் நின்று
மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க் கருளை வைப்பன்`` என்ற சிவஞானசித்தி (சூ. 2,28) இங்குக் காணத்தக்கது.
வம்பு - மணம். ``வலி`` என்றது, அதனால் விளைந்த துன்பத்தைக் குறித்தது. `பவழம்` என்பது கடைக்குறைந்து நின்றது. `பவளம்` என்றேயும் பாடம் ஓதுப. ``பவழத் தன்ன மேனி`` (குறுந்தொகைக் கடவுள் வாழ்த்து) என, வேறிடத்தும் முருகனது மேனிக்கு பவழம் உவமையாகக் கூறப் பட்டது. பகைவனை `பகை` என்றது ஒற்றுமை வழக்கு.
பல்லாற்றானும் தீமையைத் தேய்த்து நன்மையை வளர்த்து நிலவுலகத்து உயிர்களைப் புரந்தருளுதல் கூறுவார், கந்தபுராண வரலாற்றை எடுத்தோதியருளினார். அதோ முகத்தது இயல்பு கூறுகின்றாராதலின், அது வெளிப்பட நின்ற இவ்வரலாற்றையே எடுத்தோதியருளினார்.
இதனால், சிவபெருமான், மேலுலகத்துள்ளார்க்கேயன்றிக் கீழுலகத்துள்ளார்க்கும் அருள்புரிதல் கூறப்பட்டது. இவர்க்கு அருளுதலே `அதோ முகம்` என்பது குறிப்பால் உணர்த்தப் பட்டமை காண்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage