
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 8. அடிமுடி தேடல்
பதிகங்கள்

ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ்
சேணாய்வா னோங்குந் திருவுரு வேஅண்டத்
தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந்
தாண்முழு தண்டமு மாகிநின் றானே.
English Meaning:
The Lord is life, body and consciousnessFire that enveloped the firmament far
Transcending sun and moon
He pervades the Cosmic space—
Holy thus His Form of yore
Support of Universe vast.
Tamil Meaning:
இயல்பாகவே பல உடம்புகளாயும், அவ்வுடம்பில் உள்ள உயிர்களாயும், அவ்வுயிர்களினுள் அறிவொளியாயும் எல்லை யற்ற தனது பேராற்றலால் நிறைந்து நின்ற வடிவமே, பிரம விட்டுணுக்களின்முன் அண்டத்தைத் தாங்குகின்ற தூண்போல்வதாய் நீண்டு, சூரியசந்திர மண்டலங்களைக் கடந்து, தன்னால் ஆளப் படுகின்ற அண்டம் முழுதும் ஊடுருவ நின்றான் அம் மணிகண்டன்.Special Remark:
`அதனால், அவனது வியாபகத்துள் ஒரு பகுதியிலே அடங்கிக் கிடப்பவராகிய பிரம விட்டுணுக்கள் அவனை அளவிடுதல் எங்ஙனம் கூடும்` என்பது குறிப்பெச்சம். முன்னம் - முன்பே. ``தாணுவும்`` என்புழி, `ஆய்` என்பது விரிக்க.``பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே``
-தி.8 திருவெம்பாவை, 10
``பாதம் இரண்டும் வினவிற் பாதாளம் ஏழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து நின்ற தொன்மை``
-தி.8 குயிற்பத்து, 1
என்றாற்போலும் திருமொழிகளும் சிவபெருமானது அளவிடப்படாத பெருநிலையை விளக்க எழுந்தனவாம். ``ஆகி`` என்றதனை, `ஆக` எனத் திரிக்க. இது முதலாக இவ்வதிகாரத்தில் உள்ள திருமந்திரங்கள், `சாருவோபாதாளம்` என வேறோர் அதிகாரமாகச் சில பிரதிகளில் உள்ளன என்பர். ``திருவுரு`` என்பதில் உரு, நிலை. முன்னை மந்திரத்தில் உள்ள `மணிகண்டன்` என்பதைச் சுட்டுவதாகிய `அவன்` என்பது தோன்றா எழுவாய்.
இதனால், சிவபெருமானது பெருமை கூறும் முகத்தால், பிரம விட்டுணுக்களது சிறுமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage