
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 8. அடிமுடி தேடல்
பதிகங்கள்

ஆனே ழுலகுற நின்றஎம் அண்ணலுந்
தானே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும்
வானே ழுலகுறும் மாமணி கண்டனை
யானே அறிந்தேன் அவன்ஆண்மை யாலே.
English Meaning:
Yet I knew the LordThrough His Grace abounding;
He who fills the seven heavens
He who stood as Pillar of Fire
The seven worlds pervading;
He of the bejewelled throat.
Tamil Meaning:
விரிந்த பரந்த அனைத்துலகிலும் நுண்ணியனாய் நிறைந்து நிற்கின்ற சிவபெருமான், பிரம விட்டுணுக்களது போர் காரணமாக அவ்விடங்களிலெல்லாம் பெரிய அனற் பிழம்பாய் நின்ற ருளினான். நின்றும் அவனை அவ்விடங்களில் ஓரிடத்தும் ஒருவரும் கண்டிலர். ஆயினும், நான் அவனை எல்லா இடத்திலும் காண் கின்றேன்; அது நான் அவனுக்கு ஆட்செய்கின்ற முறைமையாலாம்.Special Remark:
`ஆம், தாம்` என ஓதுவன பாடம் அல்ல. ஆன் - அவ் விடம். இவ்வாறு சேய்மையாகச் சுட்டியது உலகத்தின் பரப்பு உணர்த் துதற்கு. ``யானே அறிந்தேன்`` என்றமையால், பிறர் அறிந்திலர் என்பது இனிது விளங்கிற்று. அடிமுடி காணாமையேயன்றி, `அது சிவ சோதி` என்பதனையும் அறியாது திகைத்தமையின், `பிறர் அறிந்திலர்` என்றும், எவ்விடத்தும் எப்பொருளையும் நாயனார் சிவமாகக் காணுதலால், ``யானே அறிந்தேன்`` என்றும், `சிவனை அறிதல் அவனுக்குத் தொண்டு புரிந்து நிற்பதனாலேயன்றிப் பிற ஆற்றல்களால் அன்று` என்பதற்கு, `அவன் ஆண்மையாலே` என்றும் கூறினார். இக்கருத்தையே திருநாவுக்கரசு நாயனார் தமது இலிங்கபுராணத் திருக்குறுந்தொகையிலும் (தி.5.100) பலபட வகுத்தோதினார். சேக்கிழாரும் இவ்வரலாற்று உண்மையை,தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத்தொழார்
வழுவான மனத்தாலே மாலாய மாலயனும்
இழிவாய கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை
விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்துய்ந்த படிவிரித்தார்.
-தி.12 பெ.பு. திருஞான., 78
என விளக்கினார்.
தேடிக் கண்டு கொண்டேன்; - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டு கொண்டேன். -தி.4.ப.9.பா.12
என்று அருளிச்செய்ததும் இக்கருத்தினைப் புலப்படுத்துவதாம். ``அவன்`` என்பதில் தொக்குநின்ற ஆறாவது, நான்காவதன் பொருளது. ஆள்மை - ஆளாம்தன்மை.
இதனால், மாலும், அயனும் அடிமுடி காணமாட்டா ராயதற்குக் காரணம் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage