
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 2. வேதச் சிறப்பு
பதிகங்கள்

பாட்டும் ஒலியும் பரகுங் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்
ஈட்டும் இடஞ்சென் றிகலுற் றாரே.
English Meaning:
Vedic SacrificesThose who do not participate in The singing and dancing
Of the women dedicated to the Lord,
And do not perform sacrifices or observe vows,
Go to their destiny and become miserable.
Tamil Meaning:
இயலும், இசையும், நாடகமும் ஆகிய கலை களின் பயனை அறியாவிடினும் அவற்றை இடையறாது நிகழ்த்தி நிற்கின்ற இவ்வுலகில், வேதத்தை இடையறாது ஓதுகின்ற வேதியரும் அத் தன்மைரேயாய்ப் பொருள் பெறவிரும்பி, பொருளாசை நிறைந்த நெறி முறை இல்லாத அக்கலைவல்லுநர் பொருள் ஈட்டும் இடத்திற் சென்று அவரோடு மாறுகொண்டு நிற்கின்றனர்.Special Remark:
``பாட்டு`` என்றது, இயற் பாட்டினையும், ``ஒலி`` என்றது பண்ணமைந்த இசைப் பாடல்களையுமாம். நெறிப்பட்ட வாழ்க்கையை `விரதம்` என்றார் `இயற் பாட்டு முதலிய கலைகள் யாவும் நற்பண்பினை வளர்த்தற்கு உரியனவாகவும், அவற்றில் வல்லுநராகியும் அவை வளரப் பெறாதார் பொருளீட்டுதல் ஒன்றே அவற்றாற்பெறும் பயனாகக்கொள்வர். என்பார். ``விருப்பு ஆர் விரதம் இல்லாதவர்`` என்றும், `அவர் பொருளீட்டும் இடம் அரசர் முதலிய செல்வம் மிக்கோர்களாதலின், அவ்விடத்தில் இவ்வேதியரும் சென்று, அவர்க்கு முன்னே எமக்குத் தம்மின் என அவரின் முந்துகின்றதல்லது, தாம்வேதம் ஓதியதற்குப் பயன் பிறிதில்லை` என்பார், ``அவர் ஈட்டு மிடஞ்சென்று இகலலுற்றாரே`` என்றும் கூறினார். வேதியர் அவரின் முந்துதல், `தக்கார்க்குக் கொடுத்தலாகிய இது முன்செய்யத் தக்கது` என அறிவுறுத்தி நிற்றல். `வேதியர், பிறரெல்லாம் இலௌகிகர், யாம் வைதிகர் என்று சொல்லால் தம்மை உயர்த்திக் கொள்வதல்லது, செயலால் இலௌகிகரோடு ஒக்கின்றார்` என்பதும் கூறியவாறு. `சிவபிரானை உணராதார்க்கு உலகப் பற்று நீங்காது` என்பதாம்.இம்மூன்று திருமந்திரங்களாலும், `வேதத்தின் பயன் சிவநெறியே நெறி என்று உணர்ந்து அந்நெறிநிற்றலே` என்பது உடம்பாட்டானும் எதிர்மறையானும் வலியுறுத்தப்பட்டது. ``வேதப் பயனாம் சைவம்`` (தி.12 சண்டேச்சுரர் 9) என்று அருளிய சேக்கிழார் திருமொழி இங்கு நினைக்கத்தக்கது. இப்பயன் எய்தாதாரை நோக்கியே,
``அசிக்க ஆரியங்கள் ஓதும்
ஆதரைப் பேத வாதப்
பிசுக்கரைக் காணாக் கண்; வாய்
பேசாத பேய்க ளோடே`` (தி.9 திருவிசைப்பா. 4, 5)
என்றாற்போலும் திருமொழிகள் எழுந்தன.
`வேதத்தைச் செய்தவன் இவன்` என்பது பற்றியும், அதனால், முடித்துக் கூறப்படும் நெறி இன்னது` என்பது பற்றியும் நாயனார் இவ்வாறெல்லாம் வலியுறுத்து அருளிச் செய்தமையால், `வேதம் அவரவர் தகுதிக்கேற்பப் பலவாற்றாற் பொருள் கொள்ள நிற்பது` என்பது பெறப்பட்டது, எனவே, நாயனார் பின்னர்க் கூறுமாறுபோல, உண்மையை முதற்கண்ணே முற்ற உணர்த்தினால் உணர்தல் அரிதாதல் பற்றி அதனை முதற்கண் ஒருவாற்றான் உணர்த்தும் பொது நூலே வேதம்` என்பதாயிற்று.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage