
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 2. வேதச் சிறப்பு
பதிகங்கள்

ஆறங்க மாய்வரு மம்மறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய் தப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே.
English Meaning:
One In SeveralThe Vedas and the six Vedangas proclaim only Him,
Few bother about it,
Other follow many other gods and
Consider it a privilege and thus waste their time.
Tamil Meaning:
ஆறு அங்கங்களை உடையதாய், மேற்றொட்டு எழுதாக் கிளவியாய் வருகின்ற அவ்வேதத்தைச் செய்த சிவபெரு மானை அதன் முடிவில் விளங்குபவனாக உணர்ந்து அவனது அருட் குணங்களைப் போற்றுபவர் உலகருள் ஒருவரும் இல்லை; அவர் பலரும் வேறு எவ்வெவற்றையோ தங்கள் கடனாக நினைந்து, அவற் றால் சில பேறுகளை உளவாக்கிக் கொண்டு அவற்றால் கிடைக்கின்ற பயன் மேலும் மேலும் வரும் பிறப்பேயாக அவற்றைப் பெருக்கி உழல்கின்றார்கள்.Special Remark:
`இஃது அவர் வினையிருந்தவாறு` என்பது குறிப் பெச்சம். `சிவஞானத்தாலன்றிப் பிறவி அறமாட்டாது` என்பது கருத்து. ஆறங்கம்`-`சிட்சை, வியாகரணம், நிருத்தம், சோதிடம், கற்பம், சந்தோவிசிதி` என்பன. அவற்றுள் `சிட்சை வேதத்தை ஒலிக்கும் முறையை நன்குணர்த்துவது; வியாகரணம், வேதத்தில் உள்ள தொடர் மொழிகளின் இயல்பைப் புலப்படுத்துவது; நிருத்தம், வேதத்தின் தனி மொழிகளின் இயல்பைக் கூறுவது; சோதிடம், வைதிக கருமங்கட் குரிய காலத்தின் இயல்பைத் தெரிவிப்பது. கற்பம், வைதிக கருமங் களை அனுட்டிக்கும் முறையைக் கூறுவது சந்தோவிசிதி வேதத்தின் சந்தங்களை எழுத்தெண்ணிக்கை கூறி உணர்த்துவது. இவையின்றி வேதத்தாற் பயன்கொள்ளுதல் கூடாமையின், இவை வேதத்திற்கு அங்கமாயின. அங்கம் உடையதனை ``அங்கம்`` என்றார்` ``ஆறங் கமாய்`` என்றும், ``வரும்`` என்றும் கூறியது, `இவ்வாற்றால் வேதத்தை வருந்திக் கற்றும் சிலர் அதனால் பயன் பெறாத வராகின்றனர்` என்பது உணர்த்துதற்கு.கூறு அங்கம் - சிறப்பாகச் சொல்லப்படும் உறுப்பு; தலை; ``வேறு அங்கம்`` என்றதில், ``அங்கம்`` என்பது, `இன்றியமையாதது` என்னும் பொருட்டு.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage