
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 6. பஞ்சாக்கரம் - சூக்குமம்
பதிகங்கள்

சிவன் சத்தி சீவன் செறுமலம் மாயை
அவம் சேர்த்த பாசம் மலம்ஐந் தகலச்
சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர
அவம் சேர்த்த பாசம் அணுககி லாவே.
English Meaning:
Si-Va-Ya-Na-Ma Brings Union of Jiva With Siva-SaktiThe Letters Si Va Ya Na Ma denote
Siva, Sakti, Jiva, Mala and Maya respective;
Chant it, for the five Pasas-Mala to disappear;
When with Siva and Sakti, Jiva unites
(That is when you say Si Va Ya)
The harassing Pasas flee away.
Tamil Meaning:
சூக்கும பஞ்சாக்கரத்தில் சிகாரம் முதலிய ஐந்தெழுத்துக்களும் முறையே சிவம், அருட் சத்தி, உயிர், திரோதான சத்தி, ஆணவ மலம்` என்னும் ஐந்தையும் குறிக்கும். (மாயேயம் மாயையில் அடங்க, மாயை கன்மங்கள் திரோதாயி வழிபட்டு அதனுள் அடங்க, திரோதாயியைக் குறிக்கு நகாரம் ஆணவம் ஒழிந்த மற்றை நான்கு மலங்களையும் குறிக்கும்.) ஆகச் சீவன் ஐந்து மலங்களிலும் நீங்கிச் சிவம் சத்திகளோடே சேர்ந்திருக்குமாயின், பயனில்லாத செயல்களில் செலுத்துகின்ற பாசங்கள் சிவனைச் சாராமாட்டா.Special Remark:
திரோதான சத்தி மலங்களைச் செயற்படுத்துதல் பற்றி அதுவும் `ஒரு மலம்` என்று உபசரித்துக் கூறப்படும். மலத்தைக் கெடுத்தலே அதன் குறிக்கோள் ஆதல் பற்றி அதனை, ``செறு மலம்` ஒன்றார். `மலத்தைக் கெடுக்கின்ற மலம்`` என்பது அதன் பொருள். மாயையாகிய அவத்தினைச் சேர்த்த பாசம் ஆணவம். உண்மை விளக்கம். சிவப்பிரகாசம் ஆகிய நூல்களிலும் இவ்வாறே,``சிவன், அருள், ஆவி, திரோதம், மலம் ஐந்தும்
அவன்எழுத் தஞ்சின் அடைவாம்``*
எனவும்
``திருவெழுத் தஞ்சில் ஆன்மாத்
திரோதம், மாசு, அருள், சிவம்-சூழ்
தர, நடு நின்றது.3
எனவும் கூறப்படுதல் காண்க. சிவப்பிரகாசச் செய்யுளில், ஆன்மா நடு நின்றமை கூறப்பட்டது, முதற்கண் ``பாசம்`` என்பதன்பின் `இவற்றில்` என்பது வருவிக்க. இவற்றைக் குறிப்பன சிகாரம் முதலிய எழுத்துக்கள்` என்பது, மேல் அவற்றைக் கூறியதனானே அமைந்தது.
``சீவனார்`` என உயர்த்துக் கூறியது, பாசத்துள் அகப்பட்டுத் துன்புறுதலைக் குறிக்கும் இழித்தற் குறிப்பு. சீவனார் மலம் ஐந்து அகல, சிவம் சத்தி தன்னுடன் சேர` என்றது அதிசூக்கும பஞ்சாக்கரதத்திற் செல்லல் வேண்டும் குறிப்பின் உட்கொண்டது. ``உடன்`` என்பதைச் சிவனுடனும் கூட்டுக. ``பதி அணுகின் பசு பாசம் நில்லாவே``9 என முதலிலேயும் கூறினார்.
திருவைந்தெழுத்தை நகராம் முதலாகச் சொல்லுமிடத்து ஒரு தொடர்மொழியாய் நின்று, `சிவனுக்கு வணக்கம்` என்னும் ஒரு பொதுப் பொருளையே தந்து நிற்றலால் `தூல பஞ்சாக்கரம்` எனச் சொல்லப்பட, சிகாரம் முதலாகச் சொல்லுமிடத்து ஒவ்வோர் எழுத்தும் ஒவ்வோர் நுண்பொருளைக் குறிக்க. உயிர் பாசங்களின் நீங்கித் திருவருள் வழியகச் சிவத்தை அடைதல் வேண்டும் என்னும் சிறப்புப் பொருளைக் குறித்தலால் `சூக்கும பஞ்சாக்கரம்` எனப்படுகின்றது என்க.
தூல பஞ்சாக்கரம் சமய தீக்கையிலும், சுக்கும பஞ்சாக்கரம் விசேட தீக்கையிலும் உபதேசிக்கப்படும். விசேட தீக்கை வேண்டுவோர் உலகியலில் ஓரளவேனும் பற்றுவிட்டவராய் இருத்தல் வேண்டும்.
``அந்தியும் நண்பகலும் அஞ்சு பதம் சொல்லி``8 என்னும் திருமுறைத் திருமொழியுள் அஞ்செழுத்தை, ``அஞ்சு பதம்`` என்றது, சூக்கும நிலைபற்றி எனக் கொள்ளுதல் உண்டு.
இதனால் சூக்கும பஞ்சாக்கரத்தின் உட்கிடைப் பொருள் உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage